உலக சுற்றுலாவில் இலங்கையின் பெருமை ; முக்கிய இடம்பிடித்த ஹட்டன் தேயிலை தோட்டம்
உலகின் தலைசிறந்த உணவு சார்ந்த சுற்றுலா அனுபவங்கள் குறித்து நெஷனல் ஜியோகிராஃபிக் ட்ராவலர் (National Geographic Traveller UK) இதழ் வெளியிட்ட உலகளாவிய சிறப்பு அம்சப் பட்டியலில் இலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க தேயிலை மரபு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.
ஒரு நாட்டின் உணவு மற்றும் பானங்கள், அந்த தேசத்தின் வரலாறு, கலாசாரம் மற்றும் தனித்துவமான அடையாளத்தை சுற்றுலாப் பயணிகளுக்குப் புரியவைப்பதில் பெரும் பங்கு வகிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த வகையில், இலங்கையின் ஹட்டன் பகுதியில் அமைந்துள்ள தேயிலைத் தோட்ட சுற்றுலா, உலகப் பயணிகளுக்கு ஒரு சிறந்த உதாரணமாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இலங்கையின் உலகப் புகழ்பெற்ற தேயிலைத் துறையை மிக நெருக்கமாக அனுபவிக்க, ஹட்டனில் உள்ள 550 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட டன்கெல்ட் தேயிலைத் தோட்டத்தில் அமைந்துள்ள சிலோன் டீ ட்ரெயில்ஸ் (Ceylon Tea Trails) ஒரு சிறந்த இடமாக இந்த இதழ் அடையாளப்படுத்தியுள்ளது.

1867 ஆம் ஆண்டில் பிரித்தானியர்களால் இலங்கைக்கு தேயிலை அறிமுகப்படுத்தப்பட்டது.
இன்று இலங்கை உலகின் நான்காவது பெரிய தேயிலை உற்பத்தியாளராகத் திகழ்வதோடு, குறிப்பாக மூடுபனி சூழ்ந்த மலைநாடுகளில் விளையும் மணம்மிக்க பிளாக் டீ வகைகளுக்காக சர்வதேச அளவில் புகழ்பெற்றுள்ளது என்பதையும் குறிப்பிடுகிறது.
சிலோன் டீ ட்ரெயில்ஸ் என்பது காலனித்துவ காலத்தில் கட்டப்பட்ட, தற்போது புதுப்பிக்கப்பட்ட ஐந்து தோட்ட பங்களாக்களைக் கொண்டுள்ளது.
இங்கு தங்கும் பயணிகளுக்கு நூற்றாண்டு பழமையான டன்கெல்ட் தேயிலைத் தொழிற்சாலையை இலவசமாகப் பார்வையிடும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.
இந்த 90 நிமிட பிரத்யேகச் சுற்றுப்பயணத்தை அந்தத் தோட்டத்தின் வதிவிட தேயிலை நடுகையாளரான பெர்னார்ட் முன்னின்று நடத்துகிறார்.

காலனித்துவ காலம் தொடக்கம் முதல் நவீன காலத் தயாரிப்பு முறைகள் வரை இலங்கையின் தேயிலை வரலாற்றை அவர் தனது ஆழமான அறிவின் மூலம் பயணிகளுக்கு விளக்குகிறார்.
இந்தச் சுற்றுப்பயணத்தின் போது, தேயிலை இலைகளைப் பறித்த பின் அவற்றை வாடவைத்தல், சுருட்டுதல், உலர்த்துதல் மற்றும் பதப்படுத்துதல் ஆகிய ஒவ்வொரு நிலைகளும் எவ்வாறு சுவை மற்றும் தரத்தை நிர்ணயிக்கின்றன என்பதைப் பயணிகள் நேரடியாகக் கற்றுக்கொள்ளலாம்.
இந்த அனுபவம் கண்களைக் கவரும் தேயிலைத் தோட்டங்களின் பின்னணியில் நடைபெறும் தேயிலை ருசி பார்க்கும் நிகழ்வுடன் நிறைவடைகிறது.
மேலும், இந்த இடத்திற்கு அருகிலுள்ள காசல்ரீ நீர்த்தேக்கத்தில் படகு பயணம் செய்வது மற்றும் ஒரு மணிநேர பயணத் தொலைவில் உள்ள சிவனொளிபாத மலையேற்றம் போன்ற கூடுதல் சுற்றுலா அம்சங்களையும் நெஷனல் ஜியோகிராஃபிக் இதழ் பரிந்துரைத்துள்ளது.
இலங்கையுடன் சேர்த்து, 2026 ஆம் ஆண்டின் சிறந்த உணவு சுற்றுலாத் தலங்களாக இத்தாலியின் லே மார்ச்சே, ஸ்வீடனின் போஹஸ்லான், ருவாண்டாவின் கிகாலி, ஹொங்கொங், ஜப்பானின் டோக்கியோ மற்றும் வியட்நாமின் ஹோய் ஆன் உள்ளிட்ட பல சர்வதேச இடங்களையும் அந்த இதழ் பட்டியலிட்டுள்ளது.