உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் தரவரிசையில் இலங்கைக்கு எத்தனையாவது இடம் தெரியுமா?
2026ஆம் ஆண்டிற்கான உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் தரவரிசை அறிக்கையில் இலங்கை பின்னடைவைச் சந்தித்துள்ளது.
கடந்த 2025ஆம் ஆண்டு 133 ஆவது இடத்தில் இருந்த இலங்கை, இம்முறை ஒரு இடம் பின்தள்ளப்பட்டு 134 ஆவது இடத்தைப் பெற்றுள்ளது.இலங்கையின் மகிழ்ச்சிப்புள்ளி 4.0 ஆகும்.
உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் 147 நாடுகளில் இலங்கை 134 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

தெற்காசிய பிராந்தியத்தில் இந்தியா 116 ஆவது இடத்தைப் பெற்றுள்ளதுடன், பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகள் இலங்கையை விட அதிக மகிழ்ச்சியான நாடுகளாகத் தரப்படுத்தப்பட்டுள்ளன.
சமூக மற்றும் பொருளாதார சவால்கள் பொதுமக்களின் வாழ்க்கைத்தரம் மற்றும் மனநிறைவை மேம்படுத்துவதில் பெரும் தடையாக இருப்பதாக இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
இந்த ஆண்டு அறிக்கையில் இளைஞர்களின் மகிழ்ச்சி மற்றும் சமூக ஊடகப் பயன்பாடு குறித்து விசேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
அதிகப்படியான சமூக ஊடகப் பயன்பாடு இளைஞர்களின் வாழ்க்கை திருப்தியைக் குறைப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் ஆதரவுடன் நடத்தப்பட்ட இந்த ஆய்வு தெரிவிக்கிறது.
குறிப்பாக அமெரிக்கா, கனடா, அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளில் 25 வயதிற்குட்பட்ட இளைஞர்களிடையே மகிழ்ச்சி கணிசமாகக் குறைந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
உலகின் மகிழ்ச்சியான நாடுகளில் முதல் 4 இடங்களில் பின்லாந்து (தொடர்ச்சியாக 9வது ஆண்டாக முதலிடம்), ஐஸ்லாந்து, டென்மார்க் மற்றும் கோஸ்டாரிகா (லத்தீன் அமெரிக்க நாடொன்று பெற்ற மிக உயர்ந்த தரவரிசை இதுவாகும்) ஆகிய நாடுகள் இடம்பிடித்துள்ளன.