முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மீது புதிய சர்ச்சை ; வெளியான 60 மில்லியன் ரூபா மோசடி
சர்ச்சைக்குரிய ஏயார்பஸ் விமானப் பரிவர்த்தனை தொடர்பில், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு மூன்று வெவ்வேறு சந்தர்ப்பங்களில் மொத்தமாக 60 மில்லியன் ரூபா வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையம் (CIABOC) இன்று (வியாழக்கிழமை) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இந்த வழக்கில் சந்தேக நபராக உள்ள கபில சந்திரசேன அளித்த வாக்குமூலத்தின் மூலம் இந்த தகவல் வெளிப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டது.
மேலதிக விசாரணைகள்
வழக்கு விசாரணையின் போது, கபில சந்திரசேனாவை எதிர்வரும் ஏப்ரல் 2 ஆம் திகதி வரை மேலும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கின் பின்னணியாக, 2012–2013 காலப்பகுதியில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்காக விமானங்களை கொள்முதல் செய்த ஒப்பந்தத்தில் ஊழல் இடம்பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அதன்படி, ஏயார்பஸ் நிறுவனத்துடன் 6 A330 மற்றும் 4 A350 வகை விமானங்களை வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது.
இந்த ஒப்பந்தம் தொடர்பான மோசடி குறித்த தகவல்கள் 2020 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட விசாரணைகளின் பின்னர் வெளிச்சத்திற்கு வந்தன.
அப்போது, 16.84 மில்லியன் அமெரிக்க டொலர் அளவிலான இலஞ்சம் வழங்கப்படவிருந்ததாகவும், அதில் 2 மில்லியன் டொலர் தொகை கபில சந்திரசேனாவின் மனைவியுடன் தொடர்புடைய புருனே நாட்டைச் சேர்ந்த நிறுவனத்தின் கணக்கில் வரவு வைக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
மேலும், அந்த நிதி புருனேயிலிருந்து சிங்கப்பூர் மற்றும் அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளிலுள்ள வங்கி கணக்குகள் வழியாக பல கட்டங்களாக மாற்றப்பட்டிருந்ததுடன், சிங்கப்பூரிலிருந்து இலங்கையிலுள்ள கணக்குகளுக்கும் பணம் பரிமாறப்பட்டிருந்தது விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.
இதற்கிடையில், முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்சவின் மகனான சமிந்திர இந்த வழக்கில் மூன்றாவது சந்தேக நபராக பெயரிடப்பட்டுள்ளார்.
2013 ஆம் ஆண்டு அவரது வங்கிக் கணக்கில் 160,000 அமெரிக்க டொலர் வரவு வைக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவ்வழக்கிற்கான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.