இலங்கையின் புதிய குற்றத் தடுப்புச் சட்டமூலம் ; மனித உரிமை மீறல்கள் ஏற்படும் அபாயம்
அண்மையில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இலங்கையின் 'ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலம் தன்னிச்சையான கைதுகள், சித்திரவதைகள் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு வழிவகுக்கும் அபாயத்தைக் கொண்டுள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம், அடக்குமுறைச் சட்டங்களையும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தையும் நீக்குவதாக அளித்த தேர்தல் வாக்குறுதிக்கு மாறாக, அதே போன்ற மோசமான பிரிவுகளை மீண்டும் புதிய சட்டமூலங்களில் உள்ளடக்கியுள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் சுட்டிக்காட்டியுள்ளது.

"கடுமையான குற்றம்" மற்றும் "ஒழுங்கமைக்கப்பட்ட குழு" என்பவற்றுக்கான தெளிவற்ற வரையறைகள் காரணமாக, உடைகள், பச்சை குத்தல்கள் அல்லது குறிப்பிட்ட நபர்களுடனான தொடர்புகள் போன்ற காரணிகளை அடிப்படையாகக் கொண்டு, குற்றச் செயல்களுக்கான ஆதாரங்கள் இன்றியே நபர்களைத் தடுத்து வைக்க இச்சட்டம் வழிகோலுகிறது.
நீதிவானின் தலையீடின்றி, பொதுப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு ஒரு ஆண்டு வரை தடுப்புக் காவல் உத்தரவை பிறப்பிக்க அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
காவல்துறையினரிடம் அளிக்கப்படும் வாக்குமூலங்களை நீதிமன்றத்தில் சாட்சியமாக ஏற்றுக்கொள்ள அனுமதிப்பது, சித்திரவதை மற்றும் கட்டாயப்படுத்துதலை ஊக்குவிக்கும் எனக் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவு இன்றியே தொலைபேசி, இணையம் மற்றும் இருப்பிடத் தரவுகளைப் பெற காவல்துறைக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர்களின் விவரங்களை வெளியிடுவதைக் குற்றமாக்குவதுடன், நீதிமன்ற விசாரணைகள் குறித்த ஊடக அறிக்கையிடலுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
GSP+ வரிச் சலுகைக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இச்சட்டமூலம் சர்வதேச மனித உரிமைத் தரநிலைகளை மீறுவதால், ஐரோப்பிய ஒன்றியத்தின் GSP+ வரிச்சலுகைத் திட்டத்திற்கான இலங்கையின் தகுதியைப் பாதிக்கக்கூடும்.
எனவே, அரசாங்கம் இந்தச் சட்டமூலத்தை உடனடியாக மீளப்பெற்று, உரிய ஆலோசனைகளுடன் சர்வதேச தரநிலைகளுக்கு அமைவான புதிய சட்ட வரைவை உருவாக்க வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது