வீழ்ச்சியின் விளிம்பில் இலங்கையின் முக்கிய தொழில்!
மூலப்பொருட்களின் பற்றாக்குறையால் இலங்கையின் அச்சுத் தொழில்துறையானது செயற்பாடுகளைத் தொடர்வதில் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உள்ளூர் தேவையைப் பூர்த்தி செய்யத் தேவையான காகிதங்களை இறக்குமதி செய்ய அமெரிக்க டொலருக்கு தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் காகிதத்தின் விலை சுமார் 150 சதவீதம் உயர்ந்துள்ளதாக புத்தக வெளியீட்டாளர்கள் சங்கம் அண்மையில் சுட்டிக்காட்டியது.
வழக்கமாக ஒவ்வொரு மாதமும் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் 120,000 தொன் காகிதத்துடன் ஒப்பிடுகையில், இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் காகிதத்தின் வீதம் தற்போது படிப்படியாகக் குறைந்து வருவதாக, நஷனல் பேப்பர் கம்பெனி லிமிடெட்டின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், உள்ளூர் சந்தையில் மை மற்றும் டோனர்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக அச்சக உரிமையாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதேவேளை பாடசாலை பயிற்சிப் புத்தகங்க ளுக்கான புத்தக வெளியீட்டு செயல்முறை 70% குறைந்துள்ளதாக இலங்கை புத்தக வெளியீட்டாளர்கள் எச்சரித்திருந்தனர்.
அத்துடன் வங்கிகள் காகிதத்தை இறக்குமதி செய்ய கடன் பத்திரங்களை திறக்காமையே இதற்குக் காரணம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நாட்டின் தற்போதைய பொருளாதாரச் சூழ்நிலையால், வாரம் முழுவதும் இயங்கும் அவற்றின் உற்பத்தி செயல்முறை இரண்டு முதல் மூன்று நாட்களுக்கு மாத்திரமே முன்னெடுக்கப்படுவதாக உள்ளூர் வெளியீட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு இப்பிரச்சி னைக்குத் தீர்வு காண வேண்டும் என்றும், இதே நிலை நீடித்தால் இரண்டாம் தவணைக்கு பாடசாலைகளைத் திறக்கும் போது பாடப் புத்தகங்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.