இலங்கைக்கு பெருமை தேடிக்கொடுத்த 11 வயது சிறுவன்!
பதினொரு வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான உலக மேசைப்பந்தாட்டத் தரவரிசையில் இலங்கையின் டாவி சமரவீர 3ஆம் இடத்துக்கு முன்னேறி வரலாறு படைத்துள்ளார்.
டாவி சமரவீர , கல்கிஸ்ஸை சென் தோமஸ் கல்லூரி மாணவராவார். சர்வதேச மேசைப் பந்தாட்ட சம்மேளனத்தினால் உத்தியோகபூர்வ தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.

உலக மேசைப்பந்தாட்ட தரிவரிசை
இத்தாலியின் லிஞ்ஞானோ சபியடோரோ, பெல்லா இத்தாலியா EFA விலேஜ் ஸ்போர்ட்ஸ் மண்டபத்தில் நவம்பர் 3ஆம் திகதியிலிருந்து 9ஆம் திகதிவரை நடைபெற்ற 11 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான உலக மேசைப்பந்தாட்ட போட்டியில் டாவி சமரவீசர சம்பியன் பட்டத்தை சூடி தரவரிசையில் பெரு முன்னேற்றம் அடைந்தார்.
மலேசியாவைச் சேர்ந்த ஹபிப் அஸ்ஹர் என்பவருக்கு எதிரான இறுதிப் போட்டியின் முதலாவது செட்டில் 8 - 11 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் டாவி சமரவீர தோல்வி அடைந்தார்.
ஆனால், அடுத்த மூன்று செட்களில் மிகத் திறமையாக விளையாடிய டாவி சமரவீர, 11 - 8, 11- 6, 11 - 5 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றிபெற்று சம்பியனானார்.
இப் போட்டியில் 16 வீரர்கள் சுற்றில் இத்தாலியின் பெட்டிஸ்டா பேர்னாவை 3 நேர் செட்களிலும் (11 - 3, 11 - 3, 11- 5), கால் இறுதிப் போட்டியில் இத்தாலியின் மாட்டியா மோரியை 3 - 1 என்ற செட்களிலும் (11 - 7, 4 - 11, 12 - 10, 12 - 10), அரை இறுதிப் போட்டியில் போலந்தின் மைக்கல் டரக்கனை 3 - 1 என்ற செட்களிலும் (8 - 11, 14 - 12, 11 - 7, 11 - 8) டாவி சமரவீர வெற்றிகொண்டிருந்தார்.
இந்தப் போட்டியில் சம்பியன் பட்டத்தை சூடியதன் பலனாகவே 11 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான உலக மேசைப்பந்தாட்ட தரிவரிசையில் அவர் 3ஆம் இடத்தை அடைந்தார்.
அதற்கு முன்னர் 5 வெவ்வேறு சர்வதேச மேசைப்பந்தாட்டப் போட்டிகளில் டாவி இரண்டாம் இடங்களைப் பெற்றிருந்தார்.