இலங்கையில் அதிகரிக்கும் எரிபொருள் வரிசை மரணங்கள்; மூன்று நாட்களாக காத்திருந்தவர் திடீர் உயிரிழப்பு
பயாகல ஐ.ஓ.சி எரிபொருள் நிலையத்திலும், பம்பல பிட்டிய ஐ.ஓ.சி எரிபொருள் நிலையத்திலும் வரிசையில் நின்ற இருவர் திடீரென சுகயீனமுற்று உயிரிழந்துள்ளனர்.
பயாகல ஐ.ஓ.சி எரிபொருள் நிலையத்தில் பெட்றோல் பெறுவதற்காக வரிசையில் காத்திருந்த நபரொருவர் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் தனியார் நிறுவனம் ஒன்றில் (எலிபன்ட் ஹவுஸ்) நடமாடும் ஐஸ்கிரீம் விற்பனை வாகனத்தில் சாரதியாக பணியாற்றுபவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மூன்று நாட்களாக எரிபொருள் வரிசையில் காத்திருந்த இந்த நபர் இன்று அதிகாலை 1.30 மணியளவில் திடீரென சுகயீனமுற்று வரிசையில் காத்திருந்த மற்றுமொரு ஆட்டோவில் களுத்துறை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு அங்கு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை பம்பலபிட்டிய ஐ.ஓ.சி எரிபொருள் நிலையத்தில் பெற்றோல் பெறுவதற்காக காத்து நின்ற ஒருவரும் இன்று காலை திடீரென உயிரிழந்துள்ளதாக பொலிசார் கூறியுள்ளனர்.
இதன்போது புத்தளம் பிரதேசத்தைச் சேர்ந்த 63 வயதான நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.