வளர்ச்சியைக் கண்டுள்ள இலங்கையின் விமான போக்குவரத்து சேவை
2024ஆம் ஆண்டு இலங்கையின் விமான போக்குவரத்து வளர்ச்சியடைந்துள்ளதாக விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் தனியார் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய, கடந்த வருடம் நாட்டில் உள்ள சர்வதேச விமான நிலையங்களான, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம், யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் மற்றும் மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையம் ஆகியவற்றின் ஊடாக 8,711,992 விமான பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர்.
விமான நிலையங்களின் ஊடாக நாட்டுக்கு வந்தவர்களின் எண்ணிக்கை 2023ஆண்டுடன் ஒப்பிடுகையில் கடந்த வருடம் 17.69 சதவீதமாக வளர்ச்சியடைந்துள்ளது.
அத்துடன், கடந்த வருடம் 56,289 விமானங்கள் நாட்டுக்கு பிரவேசித்துள்ளதுடன், அது 20.69 சதவீத வளர்ச்சியாகும்.
2024ஆம் ஆண்டில் விமானம் ஊடான சரக்கு போக்குவரத்து 21.13 சதவீதத்தால் அதிகரித்துள்ளதுடன், 192,498 மெற்றிக் டன் சரக்குகள் விமான நிலையங்களில் கையாளப்பட்டுள்ளன.
அத்துடன், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு எமிரேட்ஸ், கட்டார் எயார்வேஸ், சிங்கப்பூர் எயார்லைன்ஸ், எதியாட் எயார்லைன்ஸ், எயார் இந்தியா, இன்டிகோ, துர்கிஸ் எயார்லைன்ஸ் உள்ளிட்ட 30 விமான நிறுவனங்களின் விமானங்கள் இலங்கைக்கான சேவைகளை முன்னெடுத்துள்ளதாக விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் தனியார் நிறுவனம் தெரிவித்துள்ளது.