இலங்கையின் 2025 வரவு செலவுத் திட்ட முன்மொழிவு ஆரம்பம்
இலங்கையின் புதிய அரசாங்கத்தின் 2025ஆம் ஆண்டிற்கான பாதீடு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்களினால் தற்போது நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டு வருகின்றது.
பாதீடு முன்வைப்பிற்காக சபாநாயகர் ஜெகத் விக்ரமரத்ன தலைமையில் இன்று காலை நாடாளுமன்றம் கூடியுள்ளதுடன், நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நாடாளுமன்றில் தற்போது உரையாற்றுகின்றமை குறிப்பிடதக்கது.
இதன் போது ஜனாதிபதி , எமது அரசாங்கத்தின் முதலாவது வரவு செலவுத் திட்டத்தை முன்வைப்பதில் மகிழ்ச்சியடைகின்றோம். இந்த வருடத்தில் மிகப்பெரிய பொருளாதார வளர்ச்சியை நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.
2025 ஆம் ஆண்டுக்குள் 5% பொருளாதார வளர்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது.
பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று உறுதியளித்த ஜனாதிபதி, 2025 வரவுசெலவுத் திட்டத்தில் பொதுமக்கள் தொடர்பான நிதி ஒதுக்கீடுகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாகவும், பொது நிதி பொதுமக்களுக்கு பயனளிக்கும் வகையில் பயன்படுத்தப்படும் என அறிவித்தார்.
கடன் மறுசீரமைப்பைப் பொறுத்தவரை, 570 மில்லியன் அமெரிக்க டொலர் கடனைச் செலுத்திய பிறகும், 2024 ஆம் ஆண்டின் இறுதியில் அரசாங்கத்தால் அந்நிய செலாவணி கையிருப்பை 6.1 பில்லியன் அமெரிக்க டொலர்களாகப் பராமரிக்க முடிந்தது என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
பொதுமக்களின் பாரிய எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் சமர்பிக்கப்படும் இப்பாதீடானது பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள், பொதுமக்களுக்கான நலன்புரி கொடுப்பனவுகள், அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு போன்ற பல வரவேற்கதக்க விடயங்களை உள்ளடக்கியதாக அமைந்துள்ளது.