அமெரிக்க பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீன் ஆவணத்தில் இலங்கையுமா... 188 முறை தேடல்!
அமெரிக்க பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பான ஆவணக் காப்பகத்தில், 'இலங்கை' என்ற பெயர் 188 தேடல் முடிவுகளில் இடம்பெற்றுள்ளமை தெரிய வந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
எப்ஸ்டீன் தொடர்பான மின்னஞ்சல்கள், பயணத் தொடர்புகள், தொடர்பாடல் குறிப்புகள் மற்றும் மூன்றாம் தரப்பினருடனான உரையாடல்களில் இலங்கையின் பெயர் பல இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அதிர்ச்சித்தகவல் வெளியாகியுள்ளது.

தற்செயலான நிகழ்வு
எனினும், இவை பெரும்பாலும் தற்செயலான நிகழ்வுகளாகவே அமைந்துள்ளன. தனிநபர்கள் இலங்கைக்குச் சென்றமை அல்லது அங்கிருந்து திரும்பியமை குறித்த தகவல்கள்.
வசிப்பிட விவரங்கள், கல்விசார் குறிப்புகள், நேர வலயங்கள் மற்றும் பொதுவான உரையாடல்கள். இலங்கையில் தங்கியிருந்தமை அல்லது அங்கு செல்வதற்கான திட்டங்கள் போன்ற சாதாரண உரையாடல்கள் என்பன அவற்றில் உள்ளடங்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேவேளை இந்தத் தேடல் முடிவுகளின் அடிப்படையில், எப்ஸ்டீனின் குற்றச்செயல்களுடன் இலங்கை ஒரு முக்கிய இடமாக இருந்ததற்கான எந்தவொரு ஆதாரமும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை தொடர்பில் இடம்பெற்றுள்ள பெரும்பாலான தகவல்கள் தற்செயலாகக் குறிப்பிடப்பட்டவையே தவிர, குற்றச்சாட்டுகளுடன் நேரடித் தொடர்புடையவை அல்ல எனவும் கூறப்படுகின்றது.

சரிபார்க்கப்படாத பல தகவல்கள்
அதேசமயம் அமெரிக்க நீதிமன்ற நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக வெளியிடப்பட்டுள்ள இந்த ஆவணங்களில் சரிபார்க்கப்படாத பல தகவல்கள் உள்ளன.
இந்த ஆவணங்களில் ஒருவரின் பெயரோ அல்லது நாட்டின் பெயரோ இடம்பெற்றிருப்பதாலேயே அவர்கள் தவறு செய்ததாகக் கருத முடியாது எனவும், சூழலைப் பொறுத்தே அவற்றை வாசிக்க வேண்டும் எனவும் சட்ட நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்நிலையில் ஜெப்ரி எப்ஸ்டீன் ஆவணம் சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் தற்போது உலகெங்கிலும் உள்ள ஊடக நிறுவனங்கள் எப்ஸ்டீனின் வலைப்பின்னல் குறித்த மேலதிக உண்மைகளைக் கண்டறிய இந்த ஆவணங்களை விரிவாக ஆய்வு செய்து வருகின்றன.