வாக்களிக்க வருபவர்களுக்கு இலங்கை பொலிஸார் விடுத்த முக்கிய வேண்டுகோள்!
வாக்காளர்கள் வாக்களிக்க வருகை தரும் போது வாக்களிப்பு நிலையங்களில் அனுமதிக்கப்படாத பொருட்கள் தொடர்பில் இலங்கை பொலிஸார் வாக்காளர்களுக்கு அறிவித்துள்ளனர்.
ஊடக நிகழ்ச்சி ஒன்றில் இன்று (19) கலந்து கொண்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ வாக்களிக்கச் செல்லும் போது வாக்காளர்களின் பொறுப்பு குறித்து விளக்கியுள்ளார்.
சிலர் காலையில் இருந்து மது அருந்துவதை அவதானித்ததாகவும், பின்னர் சரியான முடிவை எடுக்க முடியாமல் வாக்களிப்பு நிலையத்திற்குள் நுழைய போராடுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வாக்களிக்கும் செயற்பாடுகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் வாக்காளர்கள் நடந்து கொள்ள வேண்டுமென பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ மேலும் வலியுறுத்தியுள்ளார்.
"அந்த இடத்திற்கு போதையில் யாராவது வந்தால், பொலிஸார் அவர்களை வளாகத்தில் இருந்து அகற்ற வேண்டும்" என்று அவர் மேலும் கூறினார்.
கூரிய ஆயுதங்கள், சிறிய கத்திகள் போன்ற பொருட்கள் அல்லது கையடக்கத் தொலைபேசிகள் போன்றவற்றுடன் மக்கள் வாக்களிப்பு நிலையங்களுக்குள் நுழைய கூடாது என தெரிவித்துள்ளார்.
வாக்குச் சாவடிகளுக்குள் இதுபோன்ற பொருட்களை வைத்து யாரும் நுழைய அனுமதிக்கப்பட மாட்டோம் என்றும், குறிப்பாக மொபைல் போன்கள் குரல், வீடியோ பதிவுகள், ஒலிப்பதிவு போன்றவை மற்ற வாக்காளர்களுக்கு இடையூறாக இருக்கும் என்பதால் அனுமதிக்கப்பட மாட்டாது என்றும் அவர் கூறினார்.
ஒரு சிறு சம்பவத்தால் ஒரு வாக்களிப்பு நிலையத்திற்கு இடையூறு ஏற்பட்டால், அது ஒட்டுமொத்தமாக வாக்களிக்கும் இடையூறாக அமையும் என டிஐஜி தல்துவா மேலும் தெரிவித்தார்.