மின்வெட்டால் தவிக்கும் மக்கள்: மின் விளக்குகளால் ஜொலிக்கும் நாடாளுமன்ற சபை
இலங்கையில் அண்மைக்காலமாக மின்சார நெருக்கடி தீவிரமடைந்து வருகின்றன. இந்நிலையில் மின்வெட்டு பிரச்சினையை நாளுக்கு நாள் மக்கள் சந்தித்து வருகின்றனர்.
மின்சார நெருக்கடி காரணமாக நேற்று யாழ்.நகர் உட்பட பல இடங்களில் இருக்கும் வீதி மின்விளக்குகள் அணைக்கப்பட்டது காணக்கூடியதாக இருந்தது.
இவ்வாறான நிலையில், நாடாளுமன்றத்தில் உள்ள அனைத்து விளக்குகள் மற்றும் குளிரூட்டல்களும் இன்று இயக்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டதைத் தொடர்ந்து கவலைகள் எழுந்தன.
இன்று நாடாளுமன்றத்தில் சகல மின்விளக்குகள் மற்றும் குளிரூட்டல்களும் ஒளிரக்கப்பட்டு வருகின்றமை தொடர்பில் நாடாளுமன்ற பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாபிட்டியவின் (Ranjith Siyambalapitiya) கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.
இந்த விடயத்தில் நாடாளுமன்றம் முன்மாதிரியாக இருக்க வேண்டிய நிலையில், பொதுமக்கள் தியாகம் செய்ய வலியுறுத்தப்படுவது போல் இந்த செயல் அமைந்துள்ளதாக தெரியவருகின்றது.
இந்த விடயம் தொடர்பில் ஆராயவுள்ளதாக சியம்பலாபிட்டிய நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, எரிசக்தி நெருக்கடியை எதிர்நோக்கும் நாட்டிற்கு உதவுவதற்காக இந்த வளாகத்திற்குள் கூடுதல் விளக்குகளை அணைக்க வேண்டும் என்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன (Mahinda Yapa Abeywardena) இந்த வாரம் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்படத்தக்கது.