இலங்கையில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்: நால்வர் பரிதாபமாக பலி!
புத்தாண்டு அன்று தெணியாய மற்றும் துன்கல்பிட்டிய பிரதேசங்களில் நீராடச் சென்ற போது நீரில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, மகன் உள்ளிட்ட நால்வர் உயிரிழந்துள்ளதோடு ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
தெணியாய தெணியாய பொலிஸ் பிரிவில் பல்லேகம பிரதேசத்தில் உள்ள ஆறொன்றில் கிங்தொட பிரதேசத்தைச் சேர்ந்த குடும்பத்தினர் நீராடச் சென்றுள்ளனர்.
இதன் போது அக்குடும்பத்தைச் சேர்ந்த 48 வயதுடைய தந்தை மற்றும் 16 வயதுடைய மகன் ஆகியோர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
தெணியாய பொலிஸார் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
துன்கல்பிட்டிய துன்கல்பிட்டிய பொலிஸ் பிரிவில் கெபுங்கொட கடலில் நீராடிக் கொண்டிருந்த ஐவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இவர்களில் நால்வர் அருகிலிருந்தவர்கள் மற்றும் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸாரால் மீட்க்கப்பட்டு நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் , அவர்களில் இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்தவர்கள் 17 மற்றும் 23 வயதுகளையுடைய பமுணுகம மற்றும் ஏக்கல ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாவர். சிகிச்சைப் பெற்று ஏனைய இருவரும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதோடு, 21 வயதுடைய அம்பேவல பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞன் காணாமல் போயுள்ளார்.
இச்சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.