தொடர்ந்து சிவப்பு வயத்தில் இலங்கை!
இலங்கை கொரோனா தொற்று நிலைமையில் சிவப்பு வலயத்திலேயே இருக்கின்றது. அந்த நிலைமையில் இருந்து வெளியேறுவதற்கு நாளொன்றுக்கு இனம் காணப்படும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 950 வரை குறைய வேண்டும் என விசேட வைத்திய நிபுணர் மனில்க சுமனதிலக்க தெரிவித்தார்.
கொரோனா பரவலில் இலங்கை சிவப்பு வலயமாக அறிவிக்கப்பட்டிருப்பது தொடர்பில் குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
நாட்டின் தற்போதைய நிலைமையில் கொரோனா தொற்றாளர்கள் மற்றும் நாளொன்றுக்கு இனம் காணப்படும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக்கொண்டு இலங்கை சிவப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டிருக்கின்றது.
இந்த நிலைமையில் மாற்றம் ஏற்படுவதற்கு இன்னும் ஒரு வாரகாலம் வரை செல்லும். அத்துடன் இந்த எச்சரிக்கையில் இருந்து மீண்டு, பச்சை வலயமாக பிரகடனப்படுத்தப்படுவதற்கு நாளொன்றுக்கு கொரோனா தொற்றாளர்கள் இனம் காணப்படும் எண்ணிக்கை 950 வரை குறைவடையவேண்டும்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் நாட்டில் கொரோனா தொற்றாளர்கள் நாளொன்றுக்கு இனம் காணப்படும் எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டி இருந்தது. என்றாலும் தற்போது அந்த எண்ணிக்கை குறைவடைந்து வருவதை காணக்கூடியதாக இருக்கின்றது எனக் குறிப்பிட்டார்.