யாழில் பாடசாலை மாணவர்கள் போதை பொருள் வியாபாரிகளா ? 1900 மாத்திரைகள் பறிமுதல்!
யாழ்ப்பாணத்தில் போதை மாத்திரைகளுடன் கைதான கொழும்பில் உள்ள பிரபல பாடசாலை மாணவன் உள்ளிட்ட இரு மாணவர்களும் சீர்திருத்த பள்ளியில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாண மாவட்ட போதை தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் , வெளிமாவட்ட பேருந்து நிலையத்தில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய இருவரை பொலிஸார் தடுத்து விசாரணைகளை முன்னெடுத்தனர்.

கொழும்பு மாணவனிடம் 1700 போதை மாத்திரை
அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது முன்னுக்கு பின் முரணான தகவல் வழங்கியதை அடுத்து இருவரையும் சோதனையிட்ட போது , அவர்களின் உடைமையில் இருந்து போதை மாத்திரைகள் மீட்கப்பட்டன.
இதனை அடுத்து இருவரையும் கைது செய்து பொலிஸ் நிலையம் கொண்டு சென்று விசாரணைகளை முன்னெடுத்தனர். இதன்போது வே , ஒருவர் கொழும்பில் உள்ள பிரபல பாடசாலை மாணவன் எனவும் மற்றையவர் ஊரெழு பகுதியை சேர்ந்த பாடசாலை மாணவன் எனவும் தெரிய வந்துள்ளது .
கொழும்பு மாணவனின் உடைமையில் இருந்து 1700 போதை மாத்திரைகளும் , யாழ் , மாணவனிடம் இருந்து 200 போதை மாத்திரைகளும் மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விசாரணைகளின் பின்னர் இருவரையும் , யாழ்.நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய போது , இருவரையும் அச்சுவேலியில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் தடுத்து வைக்குமாறு மன்று உத்தரவிட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.