அமெரிக்காவில் கைதான இலங்கை வர்த்தகர் ராஜரட்ணம் கைதுக்கு பின்னால் நடந்த இரகசியம்
இலங்கையில் தமது தொண்டு தொடர்பில் குற்றச்சாட்டுக்கள் எழுந்தபோதிலும், தாம் சுனாமியால் பாதிக்கப்பட்ட தமிழ் சிங்கள முஸ்லிம் மக்களுக்கு வீடுகளை கட்டி உதவி செய்துள்ளதாக அமெரிக்காவின் முன்னணி பங்குசந்தை வர்த்தகர் ராஜ் ராஜரட்ணம் (Raj Rajaratnam) தெரிவித்துள்ளார்.
குறித்த தகவலை அவுஸ்திரேலியாவில் உள்ள வானொலி ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் பங்குசந்தை வர்த்தகர் ராஜ் ராஜரட்ணம் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, அமெரிக்க பங்குச் சந்தை வர்த்தகத்தில் உட்சந்தை மோசடியில் ஈடுபட்டதாக கூறி, ராஜ் ராஜரட்ணம் கைதுசெய்யப்பட்டு 11 ஆண்டுகள் சிறைத்தண்டனைக்கு உட்படுத்தப்பட்டார்.
இந்நிலையில் ராஜ் ராஜரட்ணம், தாம் இலங்கையில் முன்னெடுத்த பொதுப் பணிகள் குறித்து தகவல்களை வெளியிட்டுள்ளார்.
இலங்கையில் ஏற்பட்ட சுனாமியின் பின்னர் தாம், மாத்தறை, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு, கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணம் போன்ற இடங்களில் வீடுகளை அமைத்ததாகவும், நற்பணிகளில் ஈடுபட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்காக 15 மில்லியன் டொலர்கள் தாம் செலவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், இலங்கை அரசின் அழுத்தத்தின் பேரிலேயே அமெரிக்க அரசாங்கம் தம்மை கைதுசெய்தது என்பது தொடர்பில் உறுதியான தரவுகள் இல்லை என்று ராஜ் ராஜரட்ணம் தெரிவித்திருந்தார். தாம் கைதுசெய்யப்படுவற்கு முன்னர் இலங்கையின் பங்குச்சந்தையில் முன்னணி பங்குதாரராக இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் பிறந்த இந்தியாவில் கல்வி கற்ற தமக்கு ஒழுக்கம், கடமை என்பவற்றை, தமது விடுதி வாழ்க்கையே கற்றுத்தந்தது என்றும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை அமெரிக்காவில் தமக்கு எதிரான வழக்கின் போது முன்னிலையான அறங்கூறுநர்கள், நிதி சம்பந்ததாக உரிய அறிவைக் கொண்டிருக்காத நிலையிலேயே தாம் நிரபராதி என்பதை நிரூபிக்கமுடியாமல் போனதாக ராஜ் ராஜரட்ணம் தெரிவித்துள்ளார்