உச்சக்கட்ட பதற்றத்தில் இலங்கை: கோட்டாபய வீட்டிற்கு முன் திணறும் பொலிஸார்!
இலங்கை நாட்டில் கடுமையான பொருளாதார நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், அந்நாட்டு அரசுக்கு எதிராகப் பொதுமக்கள் வீதியில் இறங்கியுள்ளனர்.
உலகின் பல்வேறு நாடுகளின் பொருளாதாரமும் கொரோனா பெருந்தொற்று காரணமாக மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இலங்கை நாட்டின் பொருளாதாரம் பெரும்பாலும் சுற்றுலாத் துறையையே நம்பி இருந்தது.
கொரோனாவால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள துறையாகச் சுற்றுலாத் துறை உள்ளதால் இலங்கை பொருளாதாரமும் மிக மோசமான பாதிப்பைச் சந்தித்துள்ளது. இத்துடன் வேறு சில காரங்களும் சேர இலங்கை பொருளாதாரம் மிக மோசமான நிலைக்குச் சென்றுள்ளது.

இந்த ஆண்டில் இலங்கையின் ஜிடிபி மதிப்பு மைனஸ் 16.3 சதவீதம் என்ற அளவுக்கு மிக மோசமாகச் சரிந்துள்ளது. மேலும், அந்நியச் செலாவணி குறைந்துள்ளதால், இலங்கை ரூபாயின் மதிப்பும் கடுமையாகச் சரிந்துள்ளது. தற்போது அமெரிக்கா டாலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு 256 இலங்கை ரூபாயாக வீழ்ச்சி கண்டுள்ளது.

இதனால், சர்க்கரை கிலோ ரூ.215, உருளைக் கிழங்கு கிலோ ரூ.300, பெரிய வெங்காயம் கிலோ ரூ.400 என அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணைத் தொட்டுள்ளது. இதனால் இலங்கை மக்கள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கையில் ஏற்பட்ட இந்த பொருளாதார நெருக்கடியால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்கள் அந்நாட்டு அரசுக்கு எதிராக வீதியில் இறங்கி, போராட்டத்தில் ஈடுபட்டனர். இலங்கை தலைநகர் கொழும்பில் சுமார் 2000க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் பல இடங்களில் போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. நிலைமை கையை மீறி போகும் சூழல் ஏற்பட்டதால் போராட்டங்களை ஒடுக்கத் துணை ராணுவ பொலிஸ் பிரிவு, சிறப்பு அதிரடிப்படை வரவழைக்கப்பட்டது.
இலங்கை நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து இல்லாத அளவுக்கு மிக மோசமான பொருளாதார பாதிப்பை எதிர்கொண்டுள்ளது. இதனால் உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள், எரிபொருள் ஆகியவற்றுக்குக் கடுமையான பற்றாக்குறை உள்ளது. அங்கு டீசலுக்கு கூட கடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இதனால் அங்குப் பல பகுதியில் சுமார் 13 மணி நேரம் வரை மின்வெட்டும் ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது. அதேபோல மின்சாரத்தைச் சேமிக்கத் தெருவிளக்கைக் கூட ஆன் செய்ய வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள இந்த நிலையைக் கண்டித்தும் நிலைமையை மேம்படுத்த இலங்கை அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்ஷவின் வீட்டிற்கு அருகே குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கலைக்க முயன்ற போது பரபரப்பு ஏற்பட்டது. அப்போது பொலிஸார் மீது பாட்டில்கள் மற்றும் கற்களை வீசிய போராட்டக்காரர்கள் தாக்கினர்.
பைக்கில் வந்த இரண்டு போலீசாரை, அந்த கும்பல் சுற்றி வளைத்துத் தாக்க முயலும் காட்சிகள் இணையத்தில் வெளியாகி உள்ளது. இதனால் அங்கு பெரும் பதற்றமான சூழல் ஏற்பட்டது.
இதையடுத்து போராட்டக்காரர்கள் மத்தியில் கண்ணீர்ப் புகைக் குண்டு மற்றும் தண்ணீர் பீரங்கிகளைப் பயன்படுத்தி பொலிஸார் நிலைமை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இலங்கையில் மோசமான பொருளாதார நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், கடந்த சில நாட்களாகவே அங்குப் போராட்டம் அதிகரித்துள்ளது.