யோஷிதவிற்கு எதிரான வழக்கு ; கொழும்பு மேல் நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு
பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டியான டெய்ஸி பொரெஸ்ட் ஆகியோருக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை, நவம்பர் 12ஆம் திகதி விசாரணைக்கு முந்தைய மாநாட்டிற்காக அழைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (06) உத்தரவிட்டது.
இவ்வழக்கு இன்று மேல் நீதிமன்ற நீதிபதி உதேஷ் ரணதுங்க முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது, முறைப்பாடு தரப்பால் இவ்வழக்கு தொடர்பான சில ஆவணங்கள் பிரதிவாதிகள் தரப்பினரிடம் கையளிக்கப்பட்டது.
சமர்ப்பிக்கப்பட்ட விடயங்களைக் கருத்திற் கொண்ட நீதிபதி, எதிர்வரும் நவம்பர் 12ஆம் திகதி இவ்வழக்கை விசாரணை முந்தைய மாநாட்டிற்காக அழைக்குமாறு உத்தரவிட்டார்.
சுமார் 73 மில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்களையும் உடைமைகளையும் தவறான முறையில் பெற்றதன் மூலம் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் இழைத்ததாகக் குற்றம் சாட்டி, யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டி டெய்ஸி பொரெஸ்ட் ஆகியோருக்கு எதிராக சட்டமா அதிபர் இந்த வழக்கைத் தாக்கல் செய்திருந்தார்.