இலங்கை மின்சார சபை ஊழியர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை
இலங்கை மின்சார சபை ஊழியர்கள் சமூக ஊடகத்தை பயன்படுத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இலங்கை மின்சார சபையின் பதில் பொது முகாமையாளரின் கையொப்பத்துடன் ஊழியர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றுநிருபத்தின் ஊடாக கட்டுப்பாடுகள் தொடர்பில் தௌிவுபடுத்தப்பட்டுள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் 19 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளுக்கு அமைய, மின்சார சபையின் எந்த ஊழியரும் எந்தவொரு காரணத்திற்காவும் சமூக ஊடகங்களில் தமது உத்தியோகபூர்வ தகவல்களை பயன்படுத்த முடியாது.
மின்சார சபையின் இரகசிய தகவல்களை வௌிப்படுத்துவதும் அவதூறு, பாலியல், அரசியல் அல்லது அதனுடன் தொடர்புடைய வேறு விடயங்களை சமூக ஊடகங்களில் பதிவிடுவதும் மின்சார சபையின் ஒழுக்க விதிகளுக்கு முரணானவை என சுற்றுநிருபத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தக்கூடிய தவறான தகவல்கள் , நிறுவனத்திற்கு அவதூறு ஏற்படுத்தும் கருத்துகளை ஏதேனும் ஒரு ஊழியர் வௌியிடுவது பாரதூரமான குற்றம் என பதில் பொது முகாமையாளர் கலாநிதி நரேந்திர சில்வா அறிவித்துள்ளார்.
அத்தகைய தகவல்களை சமூக ஊடகங்களில் தரவேற்றம் செய்யவும் இடுகை செய்யவும் , மீளனுப்பவும், பகிரவும் கூடாது என வலியுறுத்தப்பட்டுள்ளது.
நிறுவனத்தால் வழங்கப்பட்டுள்ள கையடக்கத் தொலைபேசிகளை பயன்படுத்தி பல்வேறு குழுமங்களை ஏற்படுத்தி தகவல்கள் பகிரப்படுகின்றமை தொடர்பில் இலங்கை மின்சார சபை தனது ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
சமூக ஊடகங்கள் ஊடாக வௌி தரப்பினருக்கு நிறுவனத்தின் தகவல்களை அநாவசியமான முறையில் வௌிப்படுத்துவதன் ஊடாக நிறுவனத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுவதை தவிர்ப்பதற்காகவே குறித்த சுற்றுநிருபம் விடுக்கப்பட்டுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.