நாடு தொடர்பில் ரணிலின் செயற்பாடு குறித்து வியப்பில் அநுர அரசாங்கம்
நாட்டினை சீர்குலைக்காத வகையில் மிகவும் நேர்த்தியான பொருளாதார நடவடிக்கைகளை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னெடுத்துள்ளதாக அநுர அரசாங்கம் பாராட்டியுள்ளது.
நாடு சீராக இயங்கும் வகையில் தேவையான ஏற்பாடுகள் அரசாங்கத்திடம் உள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு உறுப்பினர் சத்துரங்க அபேசிங்க தெரிவித்துள்ளார்.
புதிய நிதியமைச்சர் நியமிக்கப்பட்டதன் பின்னர் அடுத்த வருடத்திற்கான வரவு செலவுத் திட்ட ஆவணத்தை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
ரணிலின் ஆளுமை
எதிர்வரும் காலத்திற்கு தேவையான எரிபொருள் மற்றும் எரிவாயு கொள்வனவுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், அதற்கு தேவையான நிதி அரசாங்கத்திடம் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்தை சீர்குலைக்கும் நோக்கில் ரணில் விக்கிரமசிங்க செயற்படவில்லை எனவும், அதற்காக அவருக்கு நன்றி தெரிவிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, முன்னாள் ஜனாதிபதிகளான ரணில் விக்கிரமசிங்க மற்றும் மகிந்த ராஜபக்ச ஆகியோர் தங்களது அனுபவங்களை தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துடன் பகிர்ந்து கொள்ள முன்வருமாறு கௌரவமாக அழைப்பதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.