இலங்கை கிரிக்கெட் தடை; ICC கூட்டத்தில் பேச்சு
அஹமதாபாத்தில் இன்று (2023.11.18) ஆரம்பமாகும் சர்வதேச கிரிக்கெட் கௌன்சிலின் இந்த ஆண்டின் கடைசி சபைக் கூட்டத்தில், இலங்கை கிரிக்கெட் மீது விதிக்கப்பட்டிருக்கும் தடை குறித்து பிரதானமாக விவாதிக்கப்படவுள்ளது.
இன்று ஆரம்பமாகும் ஆண்டு இறுதியின் காலாண்டு கூட்டம், மற்றும் பல்வேறு குழுநிலைக் கூட்டங்களின் பின் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (2023.11.21) ஐ.சி.சி. சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது.
சுழற்சிக்கான வருவாய் பகிர்வு
அஹமதாபத்தில் நாளை நடைபெறவுள்ள இந்தியா மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்கு இரண்டு நாட்களில் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதில் முக்கிய விடயங்கள் குறித்தும் இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளது.
குறிப்பாக 2024–27 சுழற்சிக்கான வருவாய் பகிர்வு மற்றும் 2028 லொஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் இடம்பெற்றிருப்பது குறித்து முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கிரிக்கெட்டை இடைநிறுத்தம்
கடந்த வாரம் இடம்பெற்ற ஐ.சி.சி சபைக் கூட்டத்தில் இலங்கை கிரிக்கெட்டை இடைநிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்த நிலையில் எதிர்வரும் கூட்டத்தில் அது பற்றி விவாதிக்கப்படவுள்ளது.
எதிர்வரும் ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் 19 வயதுக்கு உட்பட்ட உலகக் கிண்ணப் போட்டியை இலங்கையில் நடத்தப்படவுள்ள நிலையில் தடைக்கு மத்தியில் அதனை தக்கவைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று தெரியவருகிறது.
உலகக் கிண்ணப் போட்டியில் இலங்கை அணி இரண்டு போட்டிகளில் மாத்திரமே வென்று எஞ்சிய ஏழு போட்டிகளில் தோல்வியை சந்தித்திருந்தது.
இந்நிலையில் விளையாட்டுத் துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க இலங்கை கிரிக்கெட் சபையை கலைத்து முன்னாள் அணித் தலைவர் அர்ஜுன ரணதுங்க தலைமையில் இடைக்கால சபை ஒன்றை நியமித்திருந்தார்.
எனினும் அந்த இடைக்கால சபைக்கு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்ததோடு இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தை பதவி விலகக் கோரும் தீர்மானம் நாடாளுமன்றத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.