2025 வரவு - செலவுத் திட்டம் தொடர்பில் அண்மைய அறிக்கை
வெரிட்டே ரிசர்ச் நிறுவனம் , 2025 ஆம் ஆண்டுக்கான பாதீட்டில் அதிக நிதி ஒதுக்கப்பட்ட 36 முன்மொழிவுகளில் 14, குறிப்பிடத்தக்க அளவில் நடைமுறைப்படுத்தப்படவில்லை என அதன் அண்மைய அறிக்கை தெரிவிக்கிறது.
இது மதிப்பீட்டுக்கு உட்படுத்தப்பட்ட முன்மொழிவுகளில் சுமார் 40 சதவீதமாகும். அதேவேளை, முழுமையாக நடைமுறைப் படுத்தப்பட்ட முன்மொழிவுகளின் விகிதம் 2024 ஆம் ஆண்டில் 17 சதவீதமாக இருந்த நிலையில், 2025 ஆம் ஆண்டில் 33 சதவீதமாக உயர்ந்துள்ளது.

2017 ஆம் ஆண்டு பாதீட்டு அமுலாக்கத்தைக் கண்காணிக்கத் தொடங்கியதிலிருந்து பதிவான அதிகபட்ச வீதம் இதுவாகும்.
மொத்தமாக 15 முன்மொழிவுகள், அதாவது 41 சதவீதமானவை, முழுமையாகவோ குறிப்பிடத்தக்க அளவிலோ நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.
2025 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் பெப்ரவரி மாதத்தில் சமர்ப்பிக்கப்பட்டதால், அதனை நடைமுறைப்படுத்த வழக்கத்தைவிடக் குறைவான காலமே கிடைத்த போதிலும் இந்த முன்னேற்றம் எட்டப்பட்டுள்ளதாக அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
மேலும், 19 சதவீதத்தைக் கொண்ட ஏழு முன்மொழிவுகளின் முன்னேற்றத்தை மதிப்பிடப் போதுமான தகவல்கள் கிடைக்காததால், அவை ‘தகவல் வெளியிடப்படவில்லை’ என்ற பிரிவில் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
தலா 500 மில்லியன் ரூபா அல்லது அதற்கு மேல் ஒதுக்கப்பட்ட 36 பாதீட்டு முன்மொழிவுகள் இந்த மதிப்பீட்டுக்கு உட்படுத்தப்பட்டன. அவற்றுக்கு ஒதுக்கப்பட்ட மொத்தத் தொகை 212 பில்லியன் ரூபாவாகும்.