நெருக்கடியில் இலங்கை ஆயுர்வேத மருந்துக் கூட்டுத்தாபனம்
உள்ளூர் ஆயுர்வேத மருந்துத் தயாரிப்புக்குத் தேவையான அத்தியாவசிய மூலிகைத் தாவரங்களின் கடுமையான பற்றாக்குறை காரணமாக இலங்கை ஆயுர்வேத மருந்துக் கூட்டுத்தாபனம் ஒரு பாரிய உற்பத்தி நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.
நாடு முழுவதும் நிலவும் பற்றாக்குறை காரணமாகப் பல பாரம்பரிய மூலிகைகளைப் பெறுவது மிகவும் கடினமாக இருப்பதாக பதிவுசெய்யப்பட்ட விநியோகஸ்தர்கள் இலங்கை ஆயுர்வேத மருந்துக் கூட்டுத்தாபனத்திற்குத் தெரிவித்துள்ளனர்.

சோற்றுக் கற்றாழைக்கு 3 மாதங்களாக தட்டுப்பாடு
இதனால், உற்பத்தியைப் பேணுவதற்காக மாற்று வழிகளில் மூலிகைகளைத் தேட வேண்டிய கட்டாயத்தில் கூட்டுத்தாபனம் உள்ளதாக அதன் தலைவர் கீதாமணி கருணாரத்ன தெரிவித்தார்.
இதன் விளைவாக, உற்பத்தி அளவுகளைப் பராமரிப்பதற்காகப் பதிவுசெய்யப்பட்ட விநியோகஸ்தர் வலையமைப்புக்கு வெளியேயும், வெளிப்புற மூலங்களிலிருந்து (External Sources) மூலிகைத் தாவரங்களைப் பெற்றுக்கொள்ளக் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது.

அதேசமயம் பல ஆயுர்வேத மருந்துகளுக்குத் தேவையான முக்கிய மூலப்பொருளான சோற்றுக் கற்றாழை, கிட்டத்தட்ட 3 மாதங்களாகக் கிடைக்காமல் இருப்பதினால் உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களிடம் வேண்டுகோள்
விநியோகங்கள் மேம்படவில்லை என்றால், ஆயுர்வேத மருந்துகள் மற்றும் அது தொடர்பான உற்பத்திகள் கடுமையான இடையூறுகளைச் சந்திக்கும் என்று இலங்கை ஆயுர்வேத மருந்துக் கூட்டுத்தாபனம் எச்சரித்துள்ளது.
இதற்கமைய கிடைக்கக்கூடிய மூலிகைத் தாவரங்களைக் கூட்டுத்தாபனத்திற்கு வழங்குமாறு பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி பொதுமக்கள் மேலதிக தகவல்களுக்குப் பொதுமக்கள் 011 2850229 என்ற இலக்கத்துக்குத் தொடர்புகொள்ளமுடியும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.