2020 நேர்மைக்கான விருதை பெற்ற சிவஸ்ரீ! குவியும் வாழ்த்துக்கள்
ஊழல் மற்றும் இலஞ்சமற்ற ஒரு சிறந்த ஆளுமை மிக்க அரச சேவையாளராக தெல்லிப்பளை பிரதேச செயலாளர் சிவஶ்ரீ தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
2003ம் ஆண்டு அரச சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்ட காலம் முதல் தற்பொழுது வரை ஊழல் மற்றும் இலஞ்சம் அற்ற சிறந்த நிர்வாகத்தினை ஏற்படுத்துவதிலேயே அதிக முக்கியத்துவத்தினை வழங்கி வரும் ஒரு சிறந்த அரச சேவையாளர்.

இதன் காரணமாகவே மிக அதிகப்படியான மீள்குடியேற்றப் பணிகளையும் மிகப் பரந்தளவிலான அபிவிருத்தி நடவடிக்கைகளையும் தெல்லிப்பளை பிரதேசத்தில் வினைத்திறனாக மேற்கொள்ள வேண்டிய தேவையினை உணர்ந்து கடந்த 2017ஆம் ஆண்டு தெல்லிப்பளை பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளராக நியமிக்கப்பட்டார்.

தனது நிர்வாக எல்லைக்குட்பட்ட சகல அலுவலர்களுக்கும் ஊழல் மற்றும் இலஞ்சம் தொடர்பில் காலத்திற்கு காலம் பொருத்தமான அறிவுறுத்தல்களை வழங்குவதுடன் அவர்களை தொடர்ச்சியாக கண்கானித்து வருவதற்குரிய சிறந்த பொறிமுறை ஒன்றை தாபித்து ஊழலற்ற நிர்வாக முறைமையினை ஏற்படுத்தி அரச சேவையின் மீது பொதுமக்கள் கொண்டுள்ள நம்பகத்தன்மையினை வலுப்படுத்துவதில் இவர் அயராது பாடுபட்டார்.
அரச சேவையின் மூலம் பொதுமக்களுக்கு ஏற்படும் குறைபாடுகள் மற்றும் ஊழல் தொடர்பான முறைப்பாடுகளை உடனுக்குடன் இலகுவான முறையில் நேரடியாக இவருக்கு தெரியப்படுத்துவதற்குரிய பொறிமுறைகளை ஏற்படுத்தி அதன் மூலம் மிகச் சிறந்த ஆழுமை மிக்க நிர்வாகத்தை ஏற்படுத்துவதில் பெரும் பங்காற்றிய ஒரு சிறந்த அரச சேவையாளர்.
பொதுமக்களால் முன்வைக்கப்படும் எந்தவொரு முறைப்பாட்டினையும் தனது நேரடி கண்காணிப்பின் கீழ் விசாரனை செய்வதற்கும் அதற்குரிய பொருத்தமான தீர்வுகளை வழங்குவதற்கும் சிறந்த பொறிமுறை ஒன்றை இவர் தாபித்து ஊழலற்ற நிர்வாகத்திற்கு அதிக முக்கியத்துவத்தினை வழங்கியுள்ளார்.
இவரது அரச சேவைக் காலத்தில் பொதுமக்களினால் முன்வைக்கப்படும் முறைப்பாடுகள் தொடர்பில் 100 சத வீதம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது இங்கு விசேடமாக ஒரு விடயமாகும்.
அரச நிர்வாக முறையில் அரச அலுவலர்கள் இணைந்து பணியாற்றுவதுடன் அவர்களால் வழங்கப்படும் சேவைகள் அனைத்தும் வெளிப்படைத் தன்மையுடள் இருக்க வேண்டும் என்பதில் இவர் அதிக கவனம் செலுத்துகின்றார்.
வினைத்திறன் மிக்க அரச நிர்வாக முறை ஒன்றினை தாபித்து அதன் மூலம் சிறந்த சேவை வழங்கியமைக்காக தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தினால் பல தடைவைகள் கௌரவிக்கப்பட்டுள்ளதுடன் இவரது நிர்வாகத்தின் கீழ் தெல்லிப்பளை பிரதேச செயலகம் உற்பத்தித்திறன் போட்டில் தேசிய மட்டத்தில் முதல் இடத்தினை பெற்றுக் கொண்டது.
அரச சேவையில் மட்டுமல்லாது இவரது தனிப்பட்ட சமூக சேவை மற்றும் சமூக நிறுவனங்களின் ஊடான சேவையின் பொழுதும் இவர் ஊழல் அற்ற நிர்வாகத்தினையும் சேவையினையும் வழங்குவதிலேயே அதிக கவனத்தினை செலுத்துள்ளார்.
குறிப்பாக கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு இக்கட்டான நிலமையினை எதிர் நோக்கிய சமயம் தனது அயராது முயற்சியால் சுகாதார துறையினருடன் இணைந்து எமது பிரதேசத்தில் நோய் பரவலை கட்டுப்படுத்துவதில் பெரும் பங்காற்றினார்.
ஊரடங்கு மற்றும் பயணத் தடை அமுலில் இருந்த சமயம் இப் பிரதேச மக்களுக்கு தேவையான அடிப்படை தேவைகளை நிறைவாக பெற்றுக் கொடுப்பதல் மிகச்சிறப்பாக செயலாற்றினார்.
அரச சேவையில் இவரது செயற்பாடுகள் மற்றும் நடத்தைகள் பிறருக்கு முன்மாதிரியாகவும் போற்றத்தக்கதாகவும் பிறரை அவ்வாறான செயற்பாடுகளுக்கு தூண்டக்கூடியதாகவும் அமைகின்றது.