இலங்கைக்கு ஜி.எஸ்.பி+ சலுகை பறிபோகும் அபாயம் ; முக்கிய தரப்பிலிருந்து எச்சரிக்கை
மனித உரிமைகளைப் பாதுகாப்பதில் இலங்கை அரசாங்கம் காட்டும் அக்கறையற்ற மற்றும் குழப்பமான அணுகுமுறை காரணமாக, ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி+ வரிச் சலுகை பறிபோகும் அபாயத்தில் உள்ளதாக இலங்கை மனித உரிமைகள் மையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரஜித் கீர்த்தி தென்னகோன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்க நடவடிக்கை எடுக்காமல், தொடர்ந்து அந்தச் சட்டத்தின் கீழ் கைதுகள் மற்றும் தடுத்து வைப்புகள் கடந்த சில மாதங்களில் பலமுறை பதிவாகியுள்ளன.
பயங்கரவாதத் தடைச் சட்டம்
இஸ்ரேலுக்கு எதிராக ஸ்டிக்கர் ஒட்டியதற்காக கைது செய்யப்பட்ட நிட்டம்புவ இளைஞர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார். பின்னர் அவர் நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான், 2007ஆம் ஆண்டு நடந்த காணாமல் போன சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பின்னர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இதற்கு மேலதிகமாக, கிழக்கு மாகாணம் ஆருகம்பே பகுதியில் தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக சந்தேகத்தின் பேரில் பலர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். 2024 செப்டம்பர் முதல் இதுவரையில் பலர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதியும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படலாம் என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த அனைத்து சம்பவங்கள் தொடர்பாகவும் பக்கச்சார்பற்ற விசாரணைகளை நடத்தாமல், இவ்வாறான சம்பவங்களைத் தடுக்க நடவடிக்கை எடுக்காதது ஐரோப்பிய ஒன்றியத்தின் அடிப்படை ஜி.எஸ்.பி+ நிபந்தனையான ‘சிவில் மற்றும் அரசியல் உரிமைகளை’ப் பாதுகாப்பதற்கான இலங்கை அரசாங்கத்தின் பொறுப்பை மீறுவதாகும்.