இலங்கையின் ஆட்சியாளர்கள் படையினரை கைவிட்டுள்ளனர்; குற்றம் சுமத்தும் சவேந்திரசில்வா
2009ம் ஆண்டின் பின்னர் இலங்கையை ஆண்ட ஆட்சியாளர்கள் ஆதாரமற்ற யுத்த குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வதில் தோல்வியடைந்துள்ளனர் என இலங்கையின் முன்னாள் பாதுகாப்பு படை பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அரசாங்கங்களின் இந்த தோல்வி , விடுதலைப்புலிகளிற்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்ட சிரேஸ்ட இராணுவ அதிகாரிகள் உலக நாடுகளின் தண்டனைகளை எதிர்கொள்ளும் நிலையை உருவாக்கியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
தனியார் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனை தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
தென்னாசியாவிற்கு கூட பயணம் செய்ய முடியாத நிலை
அரசாங்கங்கள் அரசியல் ரீதியில் இந்த பிரச்சினைகளிற்கு தீர்வை காணதவறியுள்ளமை குறித்து தனது சீற்றத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
2020 பெப்ரவரியில்தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் எதிராக அமெரிக்கா விதித்த தடைகள் குறித்தும்,மார்ச் மாதம் பிரிட்டன் விதித்த தடைகள் குறித்தும் கருத்து தெரிவித்துள்ள அவர் அமெரிக்கா பிரிட்டன் தடைகளால் தான் தென்னாசியாவிற்கு கூட பயணம் செய்ய முடியாத நிலை காணப்படுவதாக தெரிவித்துள்ளார்.
விடுதலைப்புலிகளிற்கு எதிரான இறுதி யுத்தத்தில் போரிட்ட அதிகாரியின் மகளான யொகானி சில்வாவின் லண்டன் நிகழ்ச்சிக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் குறித்தும் சவேந்திர சில்வா சுட்டிக்காட்டியுள்ளார்.
மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ்,மேஜர் ஜெனரல் கமால் குணரட்ண,மேஜர் ஜெனரல் நந்தன உடவத்த, மேஜர் ஜெனரல் பிரசன்ன டி சில்வா,சக்கி கலகே உட்பட படைப்;பிரிவுகளிற்கு தலைமை வகித்தவர்கள் சர்வதேச சமூகத்தின் தண்டனை நடவடிக்கைகளை எதிர்கொண்டுள்ளனர் என சவேந்திரசில்வா தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டதையும் மக்கள் விடுவிக்கப்பட்டதையும் நிச்சயம் கொண்டாடவேண்டும் என தெரிவித்துள்ள சவேந்திர சில்வா , முடிவிற்கு கொண்டுவரமுடியாது என பலர் நினைத்த யுத்தத்தை முடிவிற்கு கொண்டுவருவதற்காக ஆயுதப்படையினரும் பொலிஸாரும் பெரும் விலையை செலுத்தினார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இலங்கை யுத்த வெற்றியை கைவிடுவது அர்த்தமற்றது எனவும் சவேந்திர சில்வா இதன்போது குறிப்பிட்டுள்ளார்.