FIFA 2026 விசா மோசடி ; கனடா செல்லும் இலங்கையர்களுக்கு விசேட எச்சரிக்கை
2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பீபா (FIFA) உலகக் கிண்ணக் கால்பந்து போட்டிகளைக் காரணம் காட்டி முன்னெடுக்கப்படும் விசா மோசடிகள் குறித்து கனடா அரசாங்கம் இலங்கையர்கள் உள்ளிட்ட உலக நாடுகளின் பொதுமக்களுக்குப் பலத்த எச்சரிக்கை விடுத்துள்ளது.
2026 உலகக் கிண்ணப் போட்டிகளுக்காக "பீபா விசா" (FIFA Visa) என்ற பெயரிலோ அல்லது வேறு ஏதேனும் விசேட சுற்றுலா விசாக்களோ வழங்கப்படமாட்டாது என கனடா அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
நீங்கள் ஒரு ரசிகராகப் போட்டிகளைக் காண விரும்பினால், நீங்கள் ஒரு சாதாரண சுற்றுலாப் பயணியாகவே கனடாவிற்குள் நுழைய முடியும் என அந்த நாட்டு அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

கனடாவிற்குள் நுழைவதற்கு சாதாரண சுற்றுலா விசா (Visitor Visa) அல்லது இலத்திரனியல் பயண அங்கீகாரம் (eTA) மாத்திரமே அவசியமாகும்.
முக்கியமாக, உலகக் கிண்ணப் போட்டிகளுக்காக வழங்கப்படும் இந்த சுற்றுலா விசாக்களைக் கொண்டு கனடாவில் வேலை வாய்ப்புகளைப் பெறவோ அல்லது நிரந்தர வதிவிட உரிமையைக் கோரவோ முடியாது என அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ளது.
கனடா செல்வதற்கு விசா அல்லது இலத்திரனியல் பயண அங்கீகாரம் (eTA) பெற்றுத் தருவதாக உறுதியளிக்கும் குடியேற்ற முகவர்கள் (Immigration Agents) குறித்து பொதுமக்கள் அவதானமாக இருக்க வேண்டும்.
எவராலும் விசா பெற்றுத் தருவதாக 100% உத்தரவாதம் அளிக்க முடியாது என கனடா அரசாங்கம் தெரிவித்துள்ளது. விசா விண்ணப்பத்தில் வழங்கப்படும் அனைத்து தகவல்களுக்கும் விண்ணப்பதாரிகளே முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும்.
உங்கள் சார்பாக ஒரு பிரதிநிதி விண்ணப்பத்தை பூர்த்தி செய்தாலும், அதில் உள்ள தகவல்கள் துல்லியமாக இருப்பதை உறுதி செய்வது உங்கள் கடமையாகும்.
ஒருவேளை நீங்கள் சமர்ப்பிக்கும் ஆவணங்கள் தவறானதாகவோ அல்லது போலியானதாகவோ கண்டறியப்பட்டால், கனடாவிற்குள் நுழைய உங்களுக்கு 5 ஆண்டுகள் தடை விதிக்கப்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.