வெசாக் நிகழ்வை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம்
2025 வெசாக் நிகழ்வை முன்னிட்டு கொழும்பு நகரில் செயல்படுத்தப்படும் போக்குவரத்து திட்டத்தை பொலிஸார் அறிவித்துள்ளனர்.
அகில இலங்கை பௌத்த மகா சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பௌத்தலோக வெசாக் வலயம் 2025.05.12 முதல் 2025.05.14 வரையிலும், கொழும்பு ஹுணுபிட்டிய கங்காராம விகாரையும் பிரதமர் அலுவலகமும் இணைந்து ஏற்பாடு செய்யும் புத்த ரஷ்மி வெசாக் வலயம் 2025.05.12 முதல் 2025.05.16 வரை நடைபெறவுள்ளது.
பௌத்தலோக வெசாக் வலயம், பொரளை பேஸ்லைன் வீதி, சிறைச்சாலை சந்திப்பிலிருந்து தொடங்கி பேஸ்லைன் வீதி வழியாக பொரளை சந்தி, டி.எஸ்.சந்தி, பொரளை மயான சுற்றுவட்டம், பௌத்தலோக மாவத்தை வழியாக பம்பலப்பிட்டி சந்தி வரை இடம்பெறும்.
புத்த ரஷ்மி வெசாக் வலயம் கொம்பனித் தெரு பொலிஸ் சுற்றுவட்டத்திலிருந்து குமாரன்ரத்னம் வீதி, கொம்பனித் தெரு சந்தி, ஜேம்ஸ் பீரிஸ் மாவத்தை, பித்தல சந்தி, ப்ளவர் வீதி பிரதமர் அலுவலகம் வரையிலும், அந்த வீதியுடன் இணைக்கப்பட்ட பகுதிகளான ஜினரத்தன மாவத்தை, நவம் மாவத்தை மற்றும் பெரஹேர மாவத்தையிலும் நடைபெறும்.
இதற்கு மேலதிகமாக, பேப்ரூக் பிளேஸ் மற்றும் டோசன் வீதி, ஸ்டேபிள் வீதி வரை மற்றுமொரு வெசாக் வலயம் இடம்பெறும். வெசாக் நிகழ்வுகளைக் காண காலி முகத்திடல் பகுதிக்கு ஏராளமான மக்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், இந்தப் பகுதியில் விசேட போக்குவரத்துத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
12.05.2025 முதல் 13.05.2025 வரை, காலை 7.00 மணி முதல் கொழும்பு கோட்டை, காலி முகத்திடல் பகுதி, துறைமுக நகரம் மற்றும் கொள்ளுப்பிட்டி சந்திக்கு இடையில் ஒரு வழிப் போக்குவரத்து மட்டுமே இடம்பெறவுள்ளது.
வெசாக் வலயங்கள் நடைபெறும் வீதிகளுக்குள் அப்பகுதியில் வசிப்பவர்கள் மற்றும் வைத்தியசாலை மற்றும் அத்தியாவசிய சேவைகளை வழங்கும் நிறுவனங்களுக்குச் செல்லும் வாகனங்கள் அவ்வப்போது நுழைய அனுமதிக்கப்படும், ஆனால் குறித்த காலப்பகுதிக்குள் வெசாக் வலயங்களுக்குள் கொள்கலன் லொறிகள் மற்றும் டிப்பர் லொறிகள் நுழைய அனுமதிக்கப்படாது.
போக்குவரத்து நெரிசல் இயல்பு நிலைக்குத் திரும்பியதும், அனைத்து வீதிகளும் இரு திசைகளிலும் போக்குவரத்து நடவடிக்கைகளுக்காக மீண்டும் திறக்கப்படும், மேலும் இந்த வெசாக் வலயங்கள் காட்சிப்படுத்தப்படும் காலத்தில் மக்களின் பாதுகாப்பு மற்றும் வசதிக்காக பொலிஸார் விசேட பாதுகாப்புத் திட்டத்தை செயல்படுத்த உள்ளனர்.