புலம்பெயர் தொழிலாளர்களுக்காக விசேட ஓய்வூதியத் திட்டம் அறிமுகம்
2026 ஆம் ஆண்டில் இலங்கை பல நாடுகளுடன் பயனுள்ள உடன்படிக்கைகளைச் செய்துகொண்டுள்ளதோடு, வெளிநாட்டுத் தூதரக சேவைகளை வலுப்படுத்தியுள்ளதாக வெளிவிவகார பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திர தெரிவித்துள்ளார்.
வெளிவிவகார அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
பல தசாப்தங்கள் பழமையான வெளிநாட்டு சேவை நியமனங்கள் சட்டத்தில் பல குறைபாடுகள் உள்ளன.

எனவே, இந்த ஆண்டு அந்த சட்டம் திருத்தப்பட்டு, புதிய "வெளிநாட்டு வேலைவாய்ப்புச் சட்டம்" என்ற பெயரில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் வெளிநாட்டு வேலைவாய்ப்பில் ஈடுபட்டுள்ள ஊழியர்களின் நலன் கருதி 10 மில்லியன் ரூபாய் பெறுமதியான வீட்டுக்கடன் வசதிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் புலம்பெயர் தொழிலாளர்களுக்காக விசேட ஓய்வூதியத் திட்டம் ஒன்றினை அறிமுகப்படுத்துவது குறித்து தற்போது கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு ஊழியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தீர்க்க பிரதி அமைச்சர் என்ற ரீதியில் தாம் நேரடியாகத் தலையிடுவேன் என அவர் உறுதியளித்தார்.
ஊழியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து சமூக ஊடகங்கள் வாயிலாக முறைப்பாடுகளைச் செய்ய முடியும்.
இதற்காக விசேட விசாரணைப் பிரிவு ஒன்று நிறுவப்படும் என்றும் எதிர்காலத்தில் முறைப்பாடுகளை இலகுவாகச் சமர்ப்பிப்பதற்கு விசேட WhatsApp இலக்கம் ஒன்றும் அறிமுகப்படுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.