அவசரகாலச் சட்டத்திற்காக 6 ஆம் திகதி விசேட பாராளுமன்ற அமர்வுகள்!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் (Gotabaya Rajapakse) கடந்த 30ஆம் திகதி அமுலுக்குக் கொண்டுவரப்பட்ட அவசரகாலசட்ட ஒழுங்கு விதிகள் தொடர்பான பிரகடனத்தை எதிர்வரும் 06 ஆம் திகதி திங்கட்கிழமை பாராளுமன்றத்தில் விவாதிக்க இன்று கூடிய கட்சி தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் நிலைமைக்கு மத்தியில் பாராளுமன்ற அமர்வுகளை கூட்டுவதா என்பது குறித்து ஆராயும் விதமாக பாராளுமன்ற கட்சி தலைவர்கள் கூட்டம் (பாராளுமன்ற அலுவல்கள் பற்றியகுழுக் கூட்டம்) இன்று காலை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன (Mahinda Yapa Abeywardena) தலைமையில் கூடியது.
பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ள நிலையில் சபை அமர்வுகளை கூட்டுவது குறித்து ஆராயபட்ட நிலையில் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டதன் பிரகாரம் எதிர்வரும் திங்கட்கிழமை விசேட பாராளுமன்ற அமர்வுகளை கூட்டுவதென்ற தீர்மானம் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டது.
எனினும் 6ஆம்திகதி கூடும் பாராளுமன்ற அமர்வுகளில் போது இதற்கு முன்னர் பல்வேறு காரணங்களுக்காக விடுபட்ட ஆளும்-எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கேள்விகளை எடுத்துக்கொள்வதாக தீர்மானிக்கப்பட்டத்துடன், 7ஆம் திகதி சபை அமர்வுகளில் போது ஜனாதிபதியினால் பிரகடனப்படுத்தப்பட்ட அவசரகால சட்டம், மற்றும் அத்தியாவசிய பொதுச் சேவை சட்டத்தின் கீழான கட்டளை, இலங்கைப் பிணையங்கள் மற்றும் பரிவர்தனை ஆணைக்குழுசட்டமூலம், உற்பத்தி வரி (விசே ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழான கட்டளைகள், ஏற்றுமதி மற்றும் இறக்குமதி(கட்டுப்பாடு) சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் என்பன விவாதத்துக்கு எடுத்துக் கொள்ள தீர்மானிக்கப்பட்டது.