அதிகாரிகளுக்கு ஜனாதிபதி ரணில் விடுத்த விசேட உத்தரவு!
அபிவிருத்தித் திட்டங்களை அமுல்படுத்துவதில் சுற்றறிக்கைகள் தடையாக இருப்பின், அவற்றை உடனடியாக திருத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
நாட்டில் முன்னெடுக்கப்படும் இந்திய முதலீட்டு அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து ஆராயும் கலந்துரையாடல், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று (09) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
இதன்போதே ஜனாதிபதி, அதிகாரிகளுக்கு மேற்கண்டவாறு உத்தரவிட்டார். அந்த கலந்துரையாடலில் இலங்கைக்கான இந்தியாவின் பிரதி உயர்ஸ்தானிகர் வினோத் ஜேக்கப்பும் கலந்து கொண்டார்.
அதிகாரிகளுடன் சந்திப்பு
இதன்போது, இந்திய முதலீட்டில் முன்னெடுக்கப்படும் செயற்றிட்டங்களுக்கு தடையாகவுள்ள விடயங்களை கண்டறிந்து, அவற்றுக்கு உடனடி தீர்வு வழங்குமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார். அமைச்சின் செயலாளர்கள் மற்றும் அரச அதிகாரிகளுக்கு ஜனாதிபதி இந்த பணிப்புரை விடுத்துள்ளார்.
கடந்த அரசாங்கங்களால் காலத்துக்கு காலம் வெளியிடப்பட்ட சுற்றறிக்கைகள் அபிவிருத்திக்கு இடையூறாக இருக்குமாயின் அவற்றை உடனடியாக திருத்த வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி இங்கு வலியுறுத்தினார்.
இக்கலந்துரையாடலில் ஜனாதிபதி அலுவலகப் பிரதானி மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்க, மின்வலு, எரிசக்தி அமைச்சின் செயலாளர் மாபா பத்திரன உள்ளிட்ட ஏனைய அமைச்சுக்களின் செயலாளர்கள், அரச அதிகாரிகள் பங்கேற்றனர்.