அம்பாறையில் மனித–யானை மோதலைக் கட்டுப்படுத்த விசேட நடவடிக்கை
அம்பாறை மாவட்டத்தில் அதிகரித்து வரும் மனித–யானை மோதலுக்கு உடனடி மற்றும் நிலையான தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில், மனித–யானை மோதல் முகாமைத்துவம் தொடர்பான அம்பாறை மாவட்டக் குழுவின் விசேட கூட்டம் நடைபெற்றது.
அம்பாறை மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்திற்கு சுற்றாடல்துறை அமைச்சர் தம்மிக படபெந்தி தலைமை தாங்கினார்.

இதன்போது, அம்பாறை மாவட்டத்திலுள்ள வனப் பாதுகாப்பு பகுதிகளுக்குள் அனுமதியின்றி கால்நடைகள் நுழைவதைத் தடுப்பதற்கான சட்ட மற்றும் நிர்வாக நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.
மேலும், தற்போது வனப் பகுதிகளில் மேய்ச்சலுக்காக விடப்பட்டுள்ள கால்நடைகளை முறையாக அப்புறப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வனப் பகுதிகளில் கட்டுப்பாடின்றி கால்நடைகள் மேய்வதால் இயற்கை தாவர வளங்கள் குறைந்து வருகின்றன.
இதன் காரணமாக, உணவு மற்றும் நீர் வளங்களுக்காக காட்டு யானைகளுக்கும் கால்நடைகளுக்கும் இடையே கடும் போட்டி ஏற்படுவதைத் தடுப்பதே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கமாகும்.