நில அபகரிப்பு விவகாரம் ; யாழில் தனிநபரின் அட்டகாசத்தால் விவசாயிகள் பாதிப்பு
யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு வெற்றிலைக்கேணி கிராம அலுவலர் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் பல ஏக்கர் அரச காணி அத்துமீறி சுவீகரிக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி J/ 432 கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மக்கள், விவசாயம் செய்துவந்த பல ஏக்கர் கணக்கான அரச காணி தனி நபர் ஒருவரால் சுவீகரிக்கப்பட்டுள்ளது.

குறித்த அரச காணியில் வெற்றிலைக்கேணி பகுதியைச் சேர்ந்த பல விவசாயிகள், விவசாயம் செய்து வந்த நிலையில் தனி நபர் ஒருவர், அரச காணியை அத்துமீறி சுவீகரித்துள்ளதால் அப்பகுதியில் விவசாயம் செய்துவந்த விவசாயி ஒருவரால் பிரதேச செயலாளரிடம் முறையிடப்பட்டது.
பிரதேச செயலாளரிடம் கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டிற்கு அமைய அத்துமீறி அடைக்கப்பட்ட குறித்த காணி, அரச காணி எனவும், நிலைமை தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு கிராம சேவையாளருக்கு பிரதேச செயலர் உத்தரவிட்டுள்ளார்.
வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் பல ஏக்கர் வரையான அரச காணிகள் இவ்வாறு அத்துமீறி தனி நபர்களால் அடைக்கப்படுவதாக மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.