போராட்டங்களில் ஈடுபடவோருக்கு ஜனாதிபதி வெளியிட்டுள்ள அதிரடி தகவல்
எத்தகைய வேலைநிறுத்தங்கள் மற்றும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டாலும், நியாயமற்ற கோரிக்கைகளுக்கு இத்தருணத்தில் தீர்வுகளை வழங்க முடியாது என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (26) நடைபெற்ற 'வரவு செலவுத் திட்டமும் உழைக்கும் மக்களும்' - தொழிற்சங்கப் பிரதிநிதிகள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அரசாங்கத்தின் வருமானம்
நாடு சிறந்த நிதி ஒழுக்கத்துடன் நிர்வகிக்கப்படுவதாகத் தெரிவித்த ஜனாதிபதி,
அரசாங்கத்தின் வருமானம் 6,230 பில்லியன் ரூபாவாக உள்ள நிலையில், சம்பளம் மற்றும் கடன் தவணைகள் உள்ளிட்ட செலவினங்கள் 7,035 பில்லியன் ரூபாவாகக் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டினார்.
அதற்கமைய, ஈட்டப்படும் வருமானம் சம்பளம் மற்றும் கடன்களைச் செலுத்துவதற்குக் கூடப் போதுமானதாக இல்லாததால், அதற்காக 805 பில்லியன் ரூபாவைக் கடனாகப் பெற வேண்டியுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
ஏதேனும் ஒரு செலவினத்தை அதிகரிக்க வேண்டுமாயின் கடன் பெற வேண்டும் அல்லது வேறு ஒரு செலவினத்தைக் குறைக்க வேண்டும் எனக் குறிப்பிட்ட அவர், மூலதனச் செலவினங்களுக்காக 2,000 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
அன்றாடத் தேவைகளை மாத்திரம் பூர்த்தி செய்யும் பொருளாதாரமாக அன்றி, நாட்டின் பொருளாதாரத்தை முன்னோக்கிக் கொண்டு செல்வதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும் எனவும் அவர் தெரிவித்தார்.