யாழ்தேவி தொடர்பில் விசேட அறிவிப்பு
யாழ்தேவி ரயில் இயக்கப்படுவதில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்து ரயில்வே திணைக்களம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
வடக்கு ரயில் மார்க்கத்தில் வவுனியா மற்றும் ஓமந்தை இடையேயான பகுதியில் முன்னெடுக்கப்படும் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக இந்த மாதம் 7 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை குறித்த ரயில் தாமதமாக இயக்கப்படும் என்று அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, கொழும்பு கோட்டையிலிருந்து காங்கேசன்துறைக்கு இயக்கப்படும் யாழ்தேவி கடுகதி ரயில் கொழும்பு கோட்டையிலிருந்து திட்டமிட்ட நேரத்தில் (காலை 06.40) பயணத்தைத் தொடங்கி,
வவுனியா ( வவுனியாவில் முற்பகல் 11.35) வரை உரிய நேரத்தில் இயக்கப்பட்டு வவுனியா ரயில் நிலையத்தில் 02 மணி நேரம் 40 நிமிடங்கள் நிறுத்தப்பட்டு பின்னர் வவுனியா ரயில் நிலையத்தில் இருந்து பிற்பகல் 02.15க்கு காங்கேசன்துறை நோக்கி இயக்கப்படும்.
அத்துடன் காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு கோட்டைக்கு இயக்கப்படும் யாழ்தேவி கடுகதி ரயில், காங்கேசன்துறை ரயில் நிலையத்திலிருந்து 30 நிமிடங்கள் தாமதமாகி முற்பகல் 11.00 மணிக்கு பயணத்தை ஆரம்பிக்கும்.
கொழும்பு கோட்டையிலிருந்து காங்கேசன்துறை நோக்கி பயணிக்கும் யாழ்தேவி கடுகதி ரயில் (இலக்கம் 4077 ரயில்) வவுனியாவிற்கு அப்பால் காங்கேசன்துறை வரை முன்பதிவு செய்த பயணிகளுக்கு,
வவுனியா ரயில் நிலையத்தில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக ரயில் நிறுத்தப்பட்டு பயணிப்பதால், தாம் முன்பதிவு செய்த பயணச்சீட்டை இரத்து செய்ய வேண்டுமானால் பயணச்சீட்டை இரத்து செய்து முழு தொகையையும் மீளப்பெறும் வசதி, முன்பதிவு செய்யும் வசதியுள்ள ரயில் நிலையங்கள் ஊடாக மேற்கொள்ள முடியும் எனவும் ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.