துப்பாக்கி அனுமதிப்பத்திரம் தொடர்பில் வெளியான விசேட அறிவிப்பு
2026 ஆம் ஆண்டிற்காக துப்பாக்கி அனுமதிப்பத்திரங்களைக் கொண்டுள்ள நபர்கள் மற்றும் நிறுவனங்கள் தமது அனுமதிப்பத்திரங்களைப் புதுப்பித்துக்கொள்வது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சு விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
துப்பாக்கி அனுமதிப்பத்திரங்களைக் கொண்டுள்ள நபர்கள் மற்றும் நிறுவனங்கள் 2026 ஆம் ஆண்டிற்காக தமது அனுமதிப்பத்திரங்களைப் புதுப்பித்துக் கொள்வதற்கான காலக்கெடு இன்று (31) உடன் நிறைவடைவதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, குறித்த திகதிக்குள் புதுப்பிக்கத் தவறும் துப்பாக்கி உரிமையாளர்கள், துப்பாக்கிகள் கட்டளைச் சட்டத்தின் 22 ஆம் பிரிவின்படி, பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதிக்கு முன்னர் அபராதத் தொகையைச் செலுத்தி அனுமதிப்பத்திரங்களைப் புதுப்பித்துக்கொள்ள வேண்டும் என அமைச்சு அறிவித்துள்ளது.
குறித்த திகதிக்கு முன்னர் தமது அனுமதிப்பத்திரங்களைப் புதுப்பிக்கத் தவறும் அனைத்து துப்பாக்கி உரிமையாளர்களுக்கும் எதிராக, செல்லுபடியாகும் அனுமதிப்பத்திரம் இன்றி துப்பாக்கியை வைத்திருந்தமைக்காக துப்பாக்கிகள் கட்டளைச் சட்டத்தின் 22 ஆம் பிரிவின் விதிகளுக்கமைய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பாதுகாப்பு அமைச்சு தனது அறிவிப்பில் மேலும் குறிப்பிட்டுள்ளது.