வெலிக்கடை சிறை தொடர்பில் வெளியான காணொளிக்கு சிறைச்சாலை ஆணையாளர் விளக்கம்
வெலிக்கடை சிறைச்சாலை தொடர்பான தவறான காணொளி, சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டமை தொடர்பில் சிறைச்சாலை ஆணையாளர் காமினி பி. திஸாநாயக்க விளக்கமளித்துள்ளார்.
கடந்த 15ஆம் திகதி வெலிக்கடை சிறைச்சாலையின் சமையலறையை ஜனாதிபதி காண்காணிக்க சென்றதாக காணொளியொன்று, யூடியூப் சமூக வலைத்தளத்தில் பரவியது.
இது குறித்த விளக்கமளித்த சிறைச்சாலை ஆணையாளர், இது போலியான காணொளி என தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி அண்மையில் வெலிக்கடை சிறைச்சாலைக்கோ அல்லது வேறு எந்த சிறைச்சாலைக்கோ கண்காணிப்பு விஜயம் மேற்கொள்ளவில்லை எனவும் வெலிக்கடை சிறைச்சாலையின் சமையலறை தொடர்பில் எவ்வித விசாரணைகளையும் மேற்கொள்ளவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கைதிகளுக்கு உணவு வழங்குவது, அதிகாரிகளின் மேற்பார்வையிலும், பிரதானிகளின் கண்காணிப்பிலும் தினசரி செயல்பாட்டில் இருப்பதாக அவர் கூறினார்.
கைதிகளுக்கு சமைத்த உணவை வழங்குவதற்கு முன்னர் சிறைச்சாலை அத்தியட்சகர் உணவுகளை சரிபார்த்து கைதிகளுக்கு வழங்குவதாகவும் அவர் கூறினார்.
சிறைச்சாலைகளுக்குள் ஏதேனும் பதிவு அல்லது காட்சிகள் பெறப்பட்டால், சிறைத் தலைமையகத்தில் சிறப்பு அனுமதி பெற வேண்டும் என்றும், இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகளைப் பெற எந்த ஊடக நிறுவனமும் அனுமதி பெறவில்லை என்றும், எந்த படப்பிடிப்பும் நடைபெறவில்லை என்றும் ஆணையாளர் கூறினார்.
அதன்படி, இந்தச் செய்தி தொடர்பான அனைத்து காட்சிகளும் வெலிக்கடை சிறைச்சாலையிலோ அல்லது வேறு சிறைச்சாலையிலோ படமாக்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்படி, யூடியூப் அலைவரிசையினால் வெளியிடப்பட்ட பொய்யான செய்தி ஊடாக ஜனாதிபதி மற்றும் சிறைச்சாலைகள் திணைக்களத்திற்கு ஏற்படுத்தப்பட்ட அவதூறு தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கணினி குற்ற விசாரணை பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.