இலங்கையை உலுக்கிய துப்பாக்கிச்சூடு: 5 பேர் கொலை...சம்பவத்தின் பரபரப்பு சிசிரிவி காட்சிகள்!
தெற்கு அதிவேக வீதியின் பெலியத்த பகுதியில் உள்ள வெளியேறும் பகுதியில் 5 பேர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் இதுவரை எவரையும் கைது செய்ய முடியாமல் பொலிஸார் திணறி வருகின்றனர்.
இருப்பினும், துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் வந்த ஜீப் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
சம்பவம் இடம்பெற்று சுமார் 40 நிமிடங்களின் பின்னர், மாத்தறை - கம்புறுப்பிட்டி பிரதான வீதியில் கம்புறுப்பிட்டி சுற்றுவட்டத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூடு நடத்த வந்தவர் என சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் ஜீப்பில் இருந்து இறங்கி செல்லும் காட்சி சிசிரிவி கமராவில் பதிவாகியுள்ளது.
முன்னோக்கி சென்ற அவர் மீண்டும் கம்புறுப்பிட்டி பேருந்து தரிப்பிடத்திற்கு வருவது அதில் பதிவாகியுள்ளது. இதனையடுத்து மாத்தறை நோக்கிச் சென்ற பேருந்தில் ஏறிய குறித்த நபர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார்.
எவ்வாறாயினும், குறித்த நபர் யார் என்பது தொடர்பான தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
இதேவேளை, சம்பவம் தொடர்பிலான விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து ஆராய பதில் பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் தலைமையில் இன்று காலை (23-01-2024) சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் பலரின் பங்குபற்றுதலுடன் இணைய வழி முறையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
சிசிரிவி காட்சிகளில் பதிவான இந்த சந்தேக நபரின் புகைப்படங்களை விமான நிலையத்தின் தானியங்கி முக அடையாள அமைப்புக்கு அனுப்புமாறு பதில் பொலிஸ் மா அதிபர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
மேலும், கொஸ்கொட சுஜியின் அனைத்து உதவியாளர்களின் வலயமைப்பு அறிக்கையை வழங்குமாறு குற்றப் பதிவுப் பிரிவின் பணிப்பாளருக்கு இதன்போது ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
துப்பாக்கிச்சூட்டுக்காக துப்பாக்கிதாரிகள் வந்த ஜீப்பை பொலிஸார் இதுவரை கண்டுபிடிக்காத போதிலும், இது தொடர்பாக பல தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேவேளை, 'கொஸ்கொட சுஜீ' என்ற பாதாள உலகக் குழுத் தலைவரே இந்த துப்பாக்கிச் சூட்டு தாக்குதலை வழிநடத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையில் சில காலமாக நிலவி வரும் மோதல்களின் காரணமாகவே இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
கொஸ்கொட சுஜி 2018 ஆம் ஆண்டு இந்துருவ பிரதேசத்தில் சமன் என்பவரை சுட்டுக்கொல்ல முயற்சித்துள்ளார், ஆனால் அந்த முயற்சி தோல்வியடைந்தது.
நேற்றைய கொலைக்கு கூலிப்படை பயன்படுத்தப்பட்டதாகவும், அவர்கள் பாதுகாப்புப் படையில் பணியாற்றியவர்களாக இருக்கலாம் என்றும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
விசாரணைக்கு தலைமை தாங்கும் சிரேஷ்ட பொலிஸச அதிகாரி ஒருவர் இன்று தெரணவிடம் கூறுகையில், தாக்குதலுக்கு குறைந்தது மூன்று பேர் வந்திருப்பதாகவும், அவர்கள் அனைவரும் துப்பாக்கிகளைப் பயன்படுத்துவதில் நன்கு பயிற்சி பெற்றவர்கள் என்றும் கூறினார்.
தென் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சஞ்சீவ மெதவத்தவின் மேற்பார்வையில் 6 பொலிஸ் குழுக்கள் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, உயிரிழந்தவர்களின் சடலங்கள் தொடர்பான பிரேத பரிசோதனைகள் தங்காலை வைத்தியசாலையில் இன்றைய தினம் இடம்பெற்றன.