யாழில் மரண பீதியை கொடுக்கும் அரச பேருந்து ; பெரும் அச்சத்தில் மக்கள்
அனலைதீவில் வசிக்கின்ற 550 குடும்பங்கள் போக்குவரத்து சீராக இல்லாமையால் பெரும் சிரமங்கள் எதிர்நோக்குகின்றன. இங்குள்ள பொதுமக்களின் தேவைக்கு என இ.போ.ச பேருந்து ஒன்று சேவையில் ஈடுபடுத்தப்படுகின்றது.
அனலைதீவுக்கு செல்லும் பெரும்பாலானோர் இறங்குதுறையில் இருந்து உள்ளக இடங்களுக்குச் பயணம் செய்ய இப்பேருந்தை நம்பியே செல்கின்றனர்.

கடும் சேதத்தில் பேருந்து
எனினும் குறித்த பேருந்தை போக்குவரத்திற்கு பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதுடன் வாரத்தில் சில தினங்கள் மட்டுமே சேவையில் ஈடுபடுவதாகவும் ஏனைய நாள்களில் பழுதடைந்து வீதியோரமாக நிற்பதாகவும் நீண்ட காலம் பயன்படுத்தப்பட்ட இயந்திரமே இந்த பேருந்திற்கு பொருத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் இப்பேருந்து பயணம் செய்யும் வீதிகளில் கழிவு ஒயில் சிந்திக்காணப்படுவதுடன் பேருந்தின் யன்னல்கள் மற்றும் பின் கண்ணாடித்தட்டு என்பனவும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இருக்கைகளும் மோசமாக சேதமடைந்துடன் அடித்தட்டுக்கள் சேதமடைந்துள்ளதால் டீசல் புகையும் உள்ளே செல்கின்றது. புகை மற்றும் புழுதியில் இருந்து தம்மைப் பாதுகாப்பதற்காக பயணிகள் மூக்கைப் பொத்தியவாறே பயணம் செய்யவேண்டியுள்ளது.
இது தொடர்பில் இ.போ.ச அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் ஆக்கபூர்வமான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அனலைதீவு மக்கள் கவலையுடன் கூறுகின்றனர்., தமது போக்குவரத்து பிரச்சினைக்கு விரைவாக தீர்வு காணுமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.