மோட்டார் சைக்கிளை திருடிய மகன்: பெற்றோரை பாராட்டிய மக்கள்
ஓட்டமாவடியில் திருடிய மோட்டார் சைக்கிளிலேயே வீடு சென்ற மகனை பெற்றோர் கண்டித்து, மோட்டார் சைக்கிளை குறித்த உரிமையாளரிடம் கையளித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
ஓட்டமாவடியில் அமைந்துள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் இன்று (18) வியாழக்கிழமை காலை பொருட்களை கொள்வனவு செய்வதற்கு இளைஞன் ஒருவர் தனது மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார்.
வர்த்தக நிலையத்திற்கு முன்பாக மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு, பொருட்களை கொள்வனவு செய்வதற்கு இளைஞன் சென்ற வேளை அங்கிருந்த மற்றுமொரு இளைஞன் குறித்த மோட்டார் சைக்கிளை திருடி சென்றுள்ளான்.
இதையடுத்து, திருடிய மோட்டார் சைக்கிளிலேயே தனது வீட்டுக்கு சென்ற போது, பெற்றோர் மகனிடம் மோட்டார் சைக்கிளில் தொடர்பில் விசாரித்த போது, மகன் மோட்டார் சைக்கிளை திருடி வந்ததை கண்டறிந்துள்ளனர்.
பின்னர் மகனை கண்டித்த பெற்றோர், மோட்டார் சைக்கிளையும் மகனையும், கொண்டு சென்று உரிய மோட்டார் சைக்கிள் உரிமையாளரிடம் மன்னிப்புக்கோரி மோட்டார் சைக்கிளை கையளித்தனர்.
இதேவேளை, பெற்றோரின் இந்த செயற்பாட்டை அறிந்த அப்பகுதி மக்கள் பெற்றோரை பாராட்டியதுடன் , மோட்டார் சைக்கிள் திருடிய இளைஞனுக்கும் அறிவுரைகளை கூறினார்கள்.