செம்மணி மற்றும் முள்ளிவாய்க்கால் விவகாரங்களுக்கு சர்வதேச நீதியே தீர்வு
யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழி மற்றும் முள்ளிவாய்க்கால் சம்பவங்கள் தொடர்பில் நீதியை நிலைநாட்டுவதற்கு சர்வதேச விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
காங்கேசன்துறை வீதியில் அமைந்துள்ள தனது கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், செம்மணியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பான விசாரணைகள் முழுமையாகவும் வெளிப்படையாகவும் முன்னெடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

தற்போது செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து 380-க்கும் மேற்பட்ட மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இந்த விவகாரம் உலகளாவிய கவனத்தை ஈர்த்துள்ளதாக தெரிவித்தார்.
மேலும், செம்மணி அகழாய்வு பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு உண்மைகள் வெளிக்கொணரப்பட வேண்டும் என்பதுடன், அவை எந்தவித தடைகளுமின்றி நடைபெற வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளதாக அவர் கூறினார்.
இதேவேளை, முள்ளிவாய்க்கால் சம்பவங்கள் மற்றும் தமிழ் மக்களுக்கு எதிராக இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக உள்நாட்டு மட்டத்தில் நீதியைப் பெறுவதில் நம்பிக்கை இல்லை எனத் தெரிவித்த அவர், சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உள்ளிட்ட சர்வதேச பொறிமுறைகளின் ஊடாகவே நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்பதே தமது நிலைப்பாடு எனக் குறிப்பிட்டார்.
செம்மணி மற்றும் முள்ளிவாய்க்கால் தொடர்பான விவகாரங்களில் சர்வதேச நீதியே தமிழ் மக்களின் எதிர்பார்ப்பாக இருப்பதாகவும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.