இலங்கையில் பேரிடர் மீட்புப் பணிகளில் படையினர்
இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மக்களை பாதுகாக்கவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையிலும் ஆயுதப்படைகள் மீட்புபணிகள் மற்றும் நிவாரண நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.
அதன்படி இலங்கை விமானப்படை அவசர மீட்புப் பணிகளுக்காக பாதிக்கப்பட்டுள்ள இடங்களில் ஆறு ஹெலிகொப்டர்களை நிறுத்தியுள்ளது. இந்த ஹெலிகொப்டர்கள் ஹிங்குராங்கொட, அனுராதபுரம், இரத்மலானை மற்றும் வீரவில விமானப்படை தளங்களில் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

24 முகாம்களில் 1,600 விமானப்படை வீரர்கள்
24 முகாம்களில் 1,600 விமானப்படை வீரர்கள் விரைவான நடவடிக்கைக்காகத் தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியேற்றங்களுக்கு உதவுவதற்கும் நிவாரணம் வழங்குவதற்கும் இலங்கை கடற்படை நாடு முழுவதும் படகுகளுடன் கூடிய 137 குழுக்களை நிறுத்தியுளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை 550 க்கும் மேற்பட்ட கடற்படை வீரர்கள் இந்த நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இராணுவத்தினர் முழு தயார்நிலையை உறுதி செய்துள்ளதோடு இராணுவவீரர்கள் ஏற்கனவே மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
அதேவேளை தெதுறு ஓயா பெருக்கெடுத்ததன் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மஹவ எல்ல பிரதேசத்தில் இரண்டு மாடி வீட்டின் மேல் மாடியில் சிக்கியிருந்த மூவர் மீட்கப்பட்டுள்ளனர்.
இலங்கை விமானப் படைக்குச் சொந்தமான Bell-212 ரக ஹெலிகொப்டர் மூலம் இந்த மூவரும் பத்திரமாக மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை விமானப் படையின் இரத்மலானை முகாமில் இணைக்கப்பட்டிருந்த மீட்புக் குழுவினரால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.