நல்லூர் கந்தன் திருவிழாவில் ஏற்பட்டுள்ள மணல் பிரச்சினை; வெளியான உண்மை வரலாறு
யாழ்ப்பாணம் – ஜூலை 29 முதல் ஆரம்பமாக உள்ள வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி கோவிலின் வருடாந்த பெருந்திருவிழாவை முன்னிட்டு, வழமைபோல் ஆலய வளாகம் மற்றும் வெளி வீதிகளில் மணல் பரப்பும் பணிகள் நடைபெறவுள்ளன.
இது, யாழ் மாநகர சபையால் வருடா வருடம் முன்னெடுக்கப்படும் பாரம்பரிய பணி ஆகும்.
சண்முகப் பெருமானின் ஆறுமுகங்களை குறிக்கும் வகையில், சண்முக வாசலுக்கு முன்பாக ஆறு தடவைகள் மண் அகழப்பட்டு, பின்னர் வெளிவீதியெங்கும் பரப்பப்படுகிறது.
இது, பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடன்களை நிறைவேற்ற அங்கு வந்து செய்யும் அடியழிப்பு, அங்கப்பிரடம் போன்ற ஆன்மீக நடவடிக்கைகளுக்கான சடங்காக உள்ளது.
தற்போது, இந்த மணல் மண் தொடர்பாக சிலர் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து எதிர்ப்புக்களை எழுப்பியுள்ள நிலையில், உண்மையை பார்க்கும்போது, மாநகர சபை வழங்கும் மண் வருடத்திற்கு அதிகபட்சம் 40 டிப்பர் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
அதே நேரத்தில், மக்கள் குறிப்பிட்ட பகுதியில் தினமும் 8 டிப்பர் கள்ளமாக அகழ்வதாக கூறப்படுகிறது. இது வருடம் முழுவதும் நடைபெறுமாயின், 2,920 டிப்பர் வரை மண் அகழப்படுகிறது – இது தான் உண்மையான சுற்றுச்சூழல் பாதிப்பு காரணமாக இருக்கக்கூடியது.
நல்லூர் கந்தசுவாமிக்கு நேர்த்திக்கடனாக பக்தர்கள் உடலை வருத்தி, வியர்வை கலந்த, நேர்த்தி நிறைவேற்றும் மண்ணே அப்போது பரப்பப்படுகிறது.
திருவிழா முடிந்ததும், அந்த மண் ஆலயத்தால் திருப்பி எடுத்துக்கொள்ளப்படுகிறது. இது ஒரு புனித கலாசாரச் செயல்முறை. அந்த மண்ணே இன்று ஆலயத்தின் வானுயர்ந்த கோபுரங்கள் மற்றும் கட்டிடங்களுக்குப் பயன்படுத்தப்படும் மணலாக மாறுகின்றது.
பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனுக்குப் பிறகு மீண்டும் அந்த மண்ணையே கோவில் வேலைகளுக்குப் பயன்படுத்துவது, ஒரு புனித பரிவர்த்தனையாக காணப்படுகிறது.
மணலை ஒட்டி மனிதர்களின் உடலிலிருந்து மண் இழப்பு, வியர்வை கலப்பு போன்ற காரணங்களால் திருவிழை முடிவின் பின்னர் முழுமையான மண்மீட்பு சாத்தியமில்லை.
அதேவேளை, கோவில் கட்டுமான பணிகளுக்கு புதிய மணல் தேவைப்படும் என்பதால், பாதுகாத்து வைத்தாலும் மணல் தேவை மீண்டும் எழும் என்பதும் உண்மை.
இது ஒரு பக்தி சார்ந்த, ஆன்மீகமான, பரம்பரை வழிவந்த நடைமுறை. இதை சுமூகமாக நடத்தும் யாழ் மாநகர சபை மற்றும் ஆலய நிர்வாகத்தின் செயற்பாடுகள், இன்று நல்லூர் ஆலயத்தை உலகத் தமிழர்களின் வரலாற்று அடையாளமாக உருவாக்கியிருக்கின்றன.