தினமும் ஒரு ஏலக்காய் சாப்பிடுவதால் இத்தனை நன்மையா? இரத்த சர்க்கரை முதல் செரிமானம் வரை
சமையலில் அதிகம் பயன்படுத்தப்படும் ஒரு மசாலா பொருள் தான் ஏலக்காய். இந்த ஏலக்காய் உணவிற்கு நல்ல மணத்தையும் சுவையையும் தருவதற்காக பயன்படுத்தப்படுகிறது. இது தவிர ஏலக்காய் ஏராளமான மருத்துவ பண்புகளைக் கொண்டது
இதனால் ஆயுர்வேதத்தில் பல ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு தீர்வளிக்க பயன்படுத்தப்படுகிறது. முக்கியமாக இந்த ஏலக்காய் செரிமான பிரச்சனைகளுக்கு உடனடி நிவாரணத்தை அளிக்கும். இப்படிப்பட்ட ஏலக்காயை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் மென்று சாப்பிட்டால் உடலுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கும் என்பது தெரியுமா?

செரிமானம்
ஏலக்காயில் நறுமணமிக்க உட்பொருட்கள் அதிகம் உள்ளன. இவை செரிமான நொதிகளின் செயல்பாட்டை தூண்டும். எனவே வயிறு நிறைய உணவை உட்கொண்ட பின்னரோ அல்லது எண்ணெயில் பொரித்த உணவுகளை உட்கொண்ட பின்னரோ, செரிமான மண்டலத்தின் செயல்பாடு சிறப்பாக இருக்க, ஒரு ஏலக்காயை வாயில் போட்டு மென்று சாப்பிடுங்கள்.
வாய் துர்நாற்றம்
பாரம்பரியமாக வாய் துர்நாற்றத்திற்கு நம் முன்னோர்கள் பயன்படுத்திய ஒரு இயற்கை வழி தான் ஏலக்காயை வாயில் போட்டு மென்று சாப்பிடுவது. ஏலக்காயில் பாக்டீரியாக்களை எதிர்க்கும் பண்புகள் உள்ளன. இவை வாய் துர்நாற்றத்தை உண்டாக்கும் பாக்டீரியாக்களை குறைக்க உதவுகிறது. எனவே வாய் துர்நாற்ற பிரச்சனைகளை சந்திப்பவர்கள், இயற்கையாகவே அதை தடுக்க ஏலக்காயை வாயில் போட்டு மென்று சாப்பிடலாம்.

இரத்த சர்க்கரை குறையும்
ஏலக்காய் வாய்க்கு நல்ல புத்துணர்ச்சி அளிப்பதற்கு மற்றும் செரிமானத்தை சீராக்குவதற்கு மட்டுமின்றி, இரத்த சர்க்கரை அளவையும் கணிசமாக குறைக்க உதவும். ஆய்வு ஒன்றில், ஏலக்காயை அதிக கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளுடன் சேர்த்து எலிகளுக்கு கொடுத்து பரிசோதனை செய்ததில், இந்த உணவை உட்கொள்ளாத எலிகளுடன் ஒப்பிடுகையில் உணவை உட்கொண்ட எலிகளுக்கு இரத்த சர்க்கரை அளவை குறைந்திருப்பது தெரிய வந்தது.
நெஞ்செரிச்சல்
ஏலக்காயில் காணப்படும் செரிமானத்தைத் தூண்டும் நொதி வயிற்று அமிலத்தன்மையை சமநிலைப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. பொதுவாக நெஞ்செரிச்சலானது அதிக காரமான உணவுகளை உட்கொள்ளும் போது ஏற்படும். இந்நிலையில் ஏலக்காயை வாயில் போட்டு மென்று அதன் சாற்றினை விழுங்கும் போது நெஞ்செரிச்சல் குறைவதைக் காணலாம். ஆனால் அளவுக்கு அதிகமாக நெஞ்செரிச்சலை சந்தித்தால், தாமதிக்காமல் உடனே மருத்துவரை அணுகுவதே நல்லது.

இரத்த ஓட்டம்
மேம்படும் ஏலக்காயில் உள்ள வெப்பமயமான விளைவு உடலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்த பெரிதும் உதவி புரிகிறது மற்றும் உடலின் வெப்பத்தை வெளிப்புறத்திற்கு செலுத்துவதன் மூலம் வியர்வையை உண்டாக்கும் காரணியாகச் செயல்படுகிறது. மேலும் ஏலக்காயில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது மற்றும் இரத்தம் உறைவதைத் தடுத்து, இதய நோய், மூளை நோய் மற்றும் நரம்பியக்கச் சிதைவு நோய்களின் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது.