ஆசனவாயில் மாணிக்கக்கற்கள்; அதிர்ந்துபோன அதிகாரிகள்!
பெறுமதிமிக்க மாணிக்கக்கற்களை ஆசனவாய் மற்றும் பயணப்பொதிகளுக்குள் மறைத்து வைத்து சீனாவுக்குக் கடத்த முயன்ற இலங்கை வர்த்தகர்கள் இருவர் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் பேருவளை பிரதேசத்தைச் சேர்ந்த 38 மற்றும் 39 வயதுடைய மாணிக்கக்கல் வர்த்தகர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சுங்க அதிகாரிகள் தீவிர சோதனை
சந்தேக நபர்கள் இருவரும் நேற்று (21) இரவு 10.20 மணியளவில் சீன விமான சேவைக்குச் சொந்தமான CA-426 என்ற விமானம் மூலம் சீனாவின் செங்டு நகருக்குச் செல்ல கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்திருந்தனர்.
இதன்போது, அவர்களின் நடத்தை மீது சந்தேகமடைந்த சுங்க அதிகாரிகள் மேற்கொண்ட தீவிர சோதனையின் போது இந்த மாணிக்கக்கல் கடத்தல் கண்டுபிடிக்கப்பட்டது.
கைப்பற்றப்பட்ட மாணிக்கக்கற்களின் சந்தைப் பெறுமதி சுமார் மூன்று கோடியே இருபது இலட்சம் (32 மில்லியன்) ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.
வர்த்தகர்களிடமிருந்து 756 கரட் எடையைக் கொண்ட மொத்தம் 390 மாணிக்கக்கற்கள் மீட்கப்பட்டுள்ளதாக சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.