180 பயணிகளுடன் இலங்கை வந்த போலந்து விமானம்
போலந்தின் குளிர்கால சுற்றுலா தொடக்க விமானம் (Inaugural Flight) 180 பயணிகளுடன் கொழும்பு கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை நேற்று செவ்வாய்க்கிழமை (23) வந்தடைந்துள்ளது.
ஸ்மார்ட் விங்ஸ் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான 3Z–7648 என்ற இந்த விமானம், போலந்தின் வார்சாவிலிருந்து நேற்று இரவு 10.10மணியளவில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.

முதல் விமான சேவை
இந்த முதல் விமான சேவைக்கு போயிங்–737 வகை விமானம் பயன்படுத்தப்பட்டதுடன், அதில் 180 பயணிகள் மற்றும் 09 பணியாளர்கள் பயணம் செய்திருந்தனர்.
ஸ்மார்ட் விங்ஸ் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் இந்த விமான சேவை, வாரத்திற்கு ஒரு முறை, அதாவது ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும், 2026 ஆம் ஆண்டு மார்ச் 15 வரை போலந்தின் வார்சாவிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு இயக்கப்படவுள்ளது.

இந்த விமான சேவையின் மூலம் இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள், நாட்டின் முக்கிய சுற்றுலா இடங்களான கடலோரப் பகுதிகள், சிகிரியா, தம்புள்ளை, கண்டி, நுவரெலியா மற்றும் யால போன்ற இடங்களுக்கு செல்ல திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வந்திறங்கிய போலந்து சுற்றுலாப் பயணிகளை இலங்கை சுற்றுலா மேம்பாட்டுப் பணியகம் மற்றும் ஜெட்விங் பயண நிறுவனம் ஆகியவற்றின் அதிகாரிகள் அன்புடன் வரவேற்றிருந்தனர்.