மண் சரிவால் இடம்பெயர்ந்தோர் வீட்டில் எரிந்த நிலையில் சடலம்; வீட்டினர் அதிர்ச்சி
கண்டி, அங்கும்புர - கல்கந்த பகுதியில் மண்சரிவு அபாயம் காரணமாக ஆட்கள் எவரும் இன்றி இருந்த வீடொன்றிலிருந்து, எரியுண்ட நிலையில் நபர் ஒருவரின் உடலம் நேற்று (23) கண்டெடுக்கப்பட்டுள்ளது.
வீட்டின் உரிமையாளர்கள் அந்த பகுதியில் நிலவிய மண்சரிவு அபாயம் காரணமாக, சில நாட்களுக்கு முன்னர் வீட்டைப் பூட்டிவிட்டு நீர்கொழும்பு பகுதியில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டிற்குச் சென்றுள்ளனர்.

அடையாளம் காண முடியாத நிலையில் உடலம்
இந்நிலையில் நேற்று காலை வீட்டின் அருகே வசிக்கும் உறவினர் ஒருவர் வழங்கிய தகவலின் அடிப்படையில், உரிமையாளர்கள் மதியம் வீட்டுக்கு சென்று பார்த்துள்ளனர்.
இதன்போது, வீட்டின் உட்புறத்தில் அடையாளம் காண முடியாத நிலையில் மனித உடலமொன்று எரிந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள், அங்கும்புர காவல்துறைக்குத் தகவல் வழங்கினர்.
சம்பவ இடத்துக்கு விரைந்த அங்கும்புர காவல்துறையினர் உடலத்தை மீட்டதுடன், மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.