இலங்கையில் உரிமமின்றி சுற்றுலா வணிகம் நடத்துவோருக்கு SLTDA கடும் எச்சரிக்கை
இலங்கையில் உரிய பதிவு மற்றும் செல்லுபடியாகும் உரிமம் இன்றி சுற்றுலா வணிகங்களை நடத்துவது சட்டவிரோதமானது என இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை (SLTDA) எச்சரிக்கை விடுத்துள்ளது.
2005ஆம் ஆண்டின் 38ஆம் இலக்க சுற்றுலாச் சட்டத்தின் கீழ், சுற்றுலாத் துறையுடன் தொடர்புடைய வணிக நடவடிக்கைகளில் ஈடுபடும் நிறுவனங்கள் கட்டாயமாக அதிகார சபையில் பதிவு செய்து, செல்லுபடியாகும் உரிமத்தைப் பெற்றிருக்க வேண்டும் எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த விதிமுறைகளைப் பின்பற்றாமல், உரிய உரிமம் இன்றி வணிக நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படலாம் என்றும் அதிகார சபை அறிவித்துள்ளது.
இது தொடர்பான மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ளவும் விளக்கங்களைப் பெறவும் 1912 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொள்ளுமாறு பொதுமக்களும் சுற்றுலா வணிக நிறுவனங்களும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.