போலி நாணயத்தாள்கள், போதைப்பொருட்களுடன் ஆறு சந்தேகநபர்கள் கைது
கல்கிஸ்சை பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, போலி நாணயத்தாள்கள் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் ஆறு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று சனிக்கிழமை (25) கல்கிஸ்சை பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளால் இரத்மலானை மற்றும் இம்புல்கொட ஆகிய பகுதிகளில் இந்தச் சோதனைகள் முன்னெடுக்கப்பட்டன.

சட்ட நடவடிக்கை
இதன்போது சந்தேக நபர்களிடமிருந்து 91 கிராம் 200 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள், 5,000 ரூபாய் பெறுமதியான 02 போலி நோட்டுகள், 2,000 ரூபாய் பெறுமதியான 21 போலி நோட்டுகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர்கள் 25, 29, 30, 32, 35 மற்றும் 52 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவர்கள் இம்புல்கொட, தெஹிபிட்டிய, பெலெந்த மற்றும் இரத்மலானை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கல்கிஸ்சை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை கல்கிஸ்சை மேற்கொண்டு வருகின்றனர்.