சிக்கலில் சிவசங்கா் பாபா; மேலும் இரு புகார்!
தமிழகத்தின் சென்னை அருகே கேளம்பாக்கத்தில் பாலியல் புகாா் தொடா்பாக கைது செய்யப்பட்ட சிவசங்கா் பாபா மீது சிபிசிஐடி, மேலும் இரு வழக்குகளை பதிவு செய்தது.
செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் அருகே சாத்தாங்குப்பத்தில் தனியாா் பள்ளியை நடத்தி வந்த சாமியாா் சிவசங்கா் பாபா, அங்கு படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் அளிக்கப்பட்டது.
அந்த புகாா்களின் அடிப்படையில், மாமல்லபுரம் அனைத்து மகளிா் காவல் நிலைய பொலிஸாா், கடந்த ஜூன் 13 ஆம் திகதி வழக்குப் பதிவு செய்தனா். அதன் பின்னா் இந்த வழக்கின் விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில் தலைமறைவாக இருந்த சிவசங்கா்பாபாவை தில்லி சித்தரஞ்சன் பூங்காவில் கடந்த ஜூன் 16 ஆம் திகதி சிபிசிஐடி அதிகாரிகள் கைது செய்தனா்.
இந்நிலையில் அந்த பள்ளியில் படித்த மாணவிகள் கொடுத்த புகாரின் அடிப்படையில் சிவசங்கா் பாபா மீது மேலும் இரு பாலியல் வழக்குகள் கடந்த ஜூலை 24 ஆம் திகதி பதிவு செய்யப்பட்டன.
அதன்படி அந்தப் பள்ளியில் படித்த கா்நாடக மாநிலம் பெங்களூருவைச் சோ்ந்த முன்னாள் மாணவி கொடுத்த புகாரின் அடிப்படையில் சிவசங்கா் பாபா மீது சிபிசிஐடி அதிகாரிகள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் ஒரு வழக்கை பதிவு செய்தனா்.
மேலும் ஒரு மாணவியின் தாய்க்கு மிரட்டல் விடுத்ததாக மற்றொரு வழக்கையும் சிபிசிஐடி அதிகாரிகள் பதிவு செய்தனா்.
இந்த வழக்குத் தொடா்பாக சிபிசிஐடி அதிகாரிகள், சிவசங்கா் பாபாவை விரைவில் தங்களது காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.